இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது போட்டியில் டக் வேர்த்- லூவிஸ் முறையில் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வென்று தொடரை தன்வசப்படுத்தியது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது கிரிக்கெட் போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் இலங்கையை துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.

இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கையணி 274 ஓட்டங்கள் பெற்றிருந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் நிறைவில்132 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்து அணி டக் வேர்த் லூவிஸ் முறைப்படி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.