பேடன் பவலினால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் சிந்தனைகள், நோக்கங்கள் அப்போதைய பொருளாதார, சமூக, கலாசார பண்புகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த நோக்கங்களை பேணி அறிவு மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று முற்பகல் கண்டி பொல்கொல்ல கூட்டுறவு நிறுவனத்தில் இடம்பெற்ற 2014 – 2018 ஜனாதிபதி சாரணர் விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பரீட்சைகளில் வெற்றிபெறுவதால் மட்டும் பிள்ளைகளின் வாழ்க்கையில் வெற்றியை தீர்மானித்துவிட முடியாது என்றும் சாரணர் இயக்கம் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான நடைமுறை சவால்களை வெற்றிகொள்வதற்கு பெரிதும் உதவுகின்றதென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

பணத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மை வாய்ந்த உலகில் தீமைகளும் தேவையற்ற விடயங்களும் சமூகத்தை சென்றடைவதற்கு பல வழிகள் இருக்கின்ற சூழ்நிலையில் தீயவற்றை நீக்கி நற்பிரஜைகளாக வாழவேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

18 வயதாகின்றபோது சாரணர் ஒருவர் ஜனாதிபதி பதக்கத்தை பெற்றுக்கொள்வதற்கும் மிகவும் பொறுப்புவாய்ந்த பல பணிகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி சாரணர் விருது விழா நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.

இலங்கை சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது விழாவில் இலங்கையின் 37 சாரணர் மாவட்டங்களில் இருந்து ஜனாதிபதி பதக்கம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள 1,195 பேர் ஜனாதிபதி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

சாரணர் இயக்கத்தின் புதிய இணையத்தளத்தையும் ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்தார். விமான சாரணர் பேரணியில் பங்குபற்றுகின்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இலங்கை சாரணர் இயக்கத்திற்கு ஜனாதிபதி வழங்கிவரும் பங்களிப்புக்காக ஜனாதிபதிக்கு இலங்கை சாரணர் அமைப்பினால் விசேட விருது ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

நேபாளத்திலுள்ள “கே 2“ மலையில் ஏறும் நடவடிக்கையில் அண்மையில் பங்குபற்றிய கண்டி தர்மராஜ கல்லூரியின் சாரணர் அணிக்கு ஜனாதிபதி வழங்கிய அனுசரணையை நினைவுகூர்ந்து ஜனாதிபதிக்கு கௌரவ விருது ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

மத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்க, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தலைமை சாரணர் ஆணையாளர் மெரில் குணதிலக்க ஆகியோரும் அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சாரணர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்