மாலியில் ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினரின் தளபதியை உடனடியாக இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு ஐநா இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை சேர்ந்த இராணுவ அதிகாரியான கலன அமுனுபுர என்பவரை மாலியிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஐக்கியநாடுகள் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவ அதிகாரியின் கடந்த கால மனித உரிமை மீறல்களின் அடிப்படையிலேயே அவரை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக ஐநா பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகவைத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலியில் உள்ள இலங்கை படையினரின் தளபதி இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார் என கடந்த யூலை மாதம் கார்டியன் செய்தி வெளியி;ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்பின் அறிக்கையை அடிப்படையாக வைத்து கார்டியன் இதனை தெரிவித்திருந்தது.

மாலியில் உள்ள இலங்கை படையினரும் இதனை உறுதிசெய்துள்ளதாக கார்டியன் தெரிவித்திருந்தது.