பாடவிதானத்திற்கான அறிவைப் போன்றே சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பிலான அறிவையும் தெளிவையும் பாடசாலை கல்வியினூடாக பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

புலதிசிபுர தேசிய கல்வியியற் கல்லூரியின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று அனைத்து உலக நாடுகளும் சுற்றாடல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி எமது நாடு எதிர்நோக்கியுள்ள இந்த சவால்களிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் ஒன்றுபட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.

பிள்ளைகளின் அறிவை வளர்ப்பது போலவே, அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று புதிதாக டிப்ளோமா சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிள்ளைகளுக்கு எதிரான சவால்களிலிருந்து அவர்களை விடுவிப்பதுடன், தேசத்தின் எதிர்காலத்திற்காக நல்லொழுக்கத்துடன் கூடிய மாணவ சமுதாயத்தை கட்டமைக்கும் பொறுப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். 

1998ஆம் ஆண்டு ஜனாதிபதி மகாவலி அமைச்சராக பணிபுரிந்த சமயத்தில், அவரது வழிகாட்டலின் கீழ் புலதிசிபுர தேசிய கல்வியியற் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.

2000ஆம் ஆண்டு பெப்ரவரி 12ஆம் திகதி அப்போதைய உயர் கல்வியமைச்சரான பேராசிரியர் விஷ்வ வர்ணபால, கல்வி அமைச்சர் ரிச்சட் பத்திரண ஆகியோருடன் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ஜனாதிபதியின் விசேட ஆலோசனைக்கிணங்க இலங்கையில் சிங்கள மொழி மூலமாக விவசாயம் தொடர்பிலான கல்வியை வழங்கும் கல்லூரியாக இது செயற்பட்டு வருகின்றது. 

கல்லூரியில் மூன்று வருட கற்கைநெறியை நிறைவுசெய்த 559 மாணவர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வினை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சிலருக்கு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

கல்லூரியில் நிலவும் விடுதி வசதி பற்றாக்குறைக்கு தீர்வாக “எழுச்சிபெறும் பொலன்னறுவை” வேலைத்திட்டத்தின் கீழ் 165 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மாணவர் விடுதிக்கான அடிக்கல் இன்று ஜனாதிபதியினால் நாட்டப்பட்டது.

கல்லூரியின் விவசாய பீடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் அலங்கார கட்டமைப்பையும் ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்தார்.

வடமத்திய மாகாண ஆளுநர் எம்.ஜீ.ஜயசிங்ஹ, பொலன்னறுவை மேயர் சானக சிதத் ரணசிங்க ஆகியோரும் புலதிசிபுர தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி  ஜீ.பீ.மாதர ஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.