வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மேன்முறையீட்டு மனு, ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.ரீ.பீ.தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகளுக்கு நீதியரசர் தெஹிதெனிய ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே மனு மீதான விசாரணைகள் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பா.டெனிஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு அமைச்சு பதவியை எந்தவித இடையூறும் இன்றி முன்னெடுக்க இடமளிக்குமாறு இடைகால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உயர்நீதிமன்றத்தின் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவ்வாறான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கிடையாது எனவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.