(கொல்கத்தாவிலிருந்து நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கட் பேரவை (ஐ.சி.சி.) உலக இருபது 20 கிரிக்கட் போட்டிகளில் நடப்பு சம்பியனாக களம் இறங்குகின்ற போதிலும் இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் பின்னிலையில் இருந்து வெற்றியை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாக அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். 

அத்துடன் லசித் மாலிங்க பூரண குணமடையாததால் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் விளையாடுவது இன்னும் உறுதியாகவில்லை எனவும் போட்டி நடைபெறுவதற்கு முன்னர் உடற்கூற்று மருத்துவர்களால் அவர் மீண்டும் பரீட்சிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில்  நடைபெறவுள்ள குழு 1 இற்கான ஐ.சி.சி உலக இருபது 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் ஆயத்தங்கள் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மாலிங்கவைப் பொறுத்தமட்டியில் புதன்கிழமை காலை (நேற்று) குறுகிய தூர ஓட்டத்துடன் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். வியாழன்று காலை தனது வழமையான ஓட்டத்துடன் பந்துவீசுவார். அப்போதுதான் அவரது ஆரோக்கிய நிலை குறித்து திட்டவட்டமாகத் தெரியவரும். அதன் பின்னரே மாலிங்கவால் விளையாட முடியுமா இல்லையா என்பதை உடற்கூற்று மருத்துவர்கள் தீர்மானிப்பர் என மெத்யூஸ் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைக் காலங்களில் எமது அணி எதிர்பார்த்த வெற்றிகளை சுவைக்கவில்லை. அதற்காக ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அழுத்தங்களை எதிர்கொள்ள மாட்டோம். தோல்விகளை புறந்தள்ளிவைத்துவிட்டு உலக இருபது 20 போட்டிகளில் முன்னோக்கி நகர்வதற்கு முயற்சிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பயிற்சிப் போட்டிகளில் அடைந்த தோல்விகள் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா எனக் கேட்டபோது,

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். அது பயிற்சிப் போட்டியாக இருக்கட்டும் அல்லது நிஜப் போட்டியாக இருக்கட்டும் வெற்றியும் தோல்வியும் சகஜம். ஆனால் நாம் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தோம். எமது அணியைப் பொறுத்தமட்டில் தோல்வியில் ஒருபோதும் துவண்டுவிடவில்லை. அதன் பின்னரும் நாங்கள் அனைவரும் ஓரணியாகவே செயற்பட்டு வருகின்றோம் என்றார்.

இந்த தோல்விகள் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் அழுத்தத்தை ஏற்படுத்துமா என்று வினவியபோது,

சில போட்டிகளில் தோல்வி அடைந்த போதிலும் ஆப்கானிஸ்தானை நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம். ஆப்கானிஸ்தான் அணியின் திறமையை திட்டவட்டமாக அனுமானிக்க முடியாது. அவ்வணியை இலகுவாக எம்மால் கருதவும் முடியாது. 

இவ் வருட உலக இருபது 20 கிரிக்கட்டில் இது எமது முதல் போட்டி என்பதால் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெறவேண்டும். வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளோம். அத்துடன் ஒவ்வொரு போட்டியாக கவனத்தில் எடுத்து விளையாடுவோம்.|என ஏஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை தொடர்பாக கேட்டபோது,

எமது துடுப்பாட்ட அணுகுமுறை சிறப்பாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் அவசியமில்லை. என்றாலும் ஆட்டத்தின் தன்மையைக் கருத்தில்கொண்டு மாற்றம் செய்யப்படலாம். தினேஷ் சந்திமாலும் மீள் வருகை தந்து 3ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடும் லஹரு திரிமான்னவும் சிறப்பாக செயல்படுகின்றார். ஆசிய கிண்ணப் போட்டிகளில் சந்திமால் மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடினார். 

அதேபோன்று பயிற்சிப் போட்டிகளில் திரிமான்ன திறமையை வெளிப்படுத்தினார். அவர்களில் நாங்கள் தங்கியிருப்பதுடன் அவர்கள் தொடர்ந்து ஓட்டங்களைக் குவிப்பர் என எதிர்பார்க்கின்றோம். அத்;துடன் ஏனையவர்களும் துடுப்பாட்டத்தை ஸ்திரப்படுத்தவேண்டும். குறிப்பாக மத்திய வரிசையில் ஓட்டங்கள் கணிசமாகப் பெறப்படவேண்டும் என அவர் பதிலளித்தார்.