முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பாக  மேல் மாகாண சபையில் செய்த திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானதென சட்டமா அதிபர் திணைக்களம் கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துகொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்று நிருபத்தை மேல் மாகாண சபையில் திருத்தம் செய்தமை தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். 

இதன் பிரகாரம் இந்த திருத்தம் தொடர்பாக செயலாளர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விளக்கத்தை கேட்டிருந்தார்.

இதன்படி மேல் மாகாண சபையின் குறித்த திருத்தம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பான விளக்கத்தை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேல் மாகாண சபையில் செய்த திருத்தம் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2019 ஆம் ஆண்டுக்கு முதலாம் தரத்துக்கான மாணவர்களை இணைத்துகொள்வது தொடர்பாக கல்வி அமைச்சு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தை திருத்தம் செய்யாது நடைமுறைப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மேல் மாகாண சபையிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.