(இரோஷா வேலு) 

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுசரணையும் ஆலோசனையும் இல்லையேல் இலங்கை பொலிஸ் சேவை இவ்வளவு தூரம் சாத்தியமான காரியங்களை செய்திருக்க இயலாது.யார் என்ன சொன்னாலும் பொலிஸ் திணைக்களத்திற்கு பொலிஸ் ஆணைக்குழுவே பக்கபலமாகவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.

இலங்கையில் முற்றுமுழுதாக போதைப்பொருட்களை கட்டுப்படுத்தும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டுள்ள பொலிஸ் திணைக்களத்திற்கு கடந்த மூன்று வருடங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு பக்கபலமாக செயற்படுகின்றது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தில் திறம்பட செயலாற்றியவர்களை கெளரவிக்கும் வகையில் பொலிஸ்மா அதிபர் நிதியத்திலிருந்து பணப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மேல்மாகாண அழகியல் கற்கை கலையரங்களில் இடம்பெற்றிருந்தது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.