காஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நயன்தாரா, திரிஷா, சமந்தாவைப் போல் இவருக்கும் கதையின் நாயகியாக நடித்து புகழ்பெறவேண்டும் என்று விரும்பினார்.  இதனால் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற ‘குயீன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமானார்.

நடிகரும் இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

இதில் கவிஞரும், எழுத்தாளருமான தமிழ்ச்சி தங்கபாண்டியன் வசனம் எழுதியிருக்க, அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார்.

சிவகாசி போன்ற சிறிய நகரில் வசிக்கும் தன்னம்பிக்கை குறைவான பெண்ணான காஜல் அகர்வாலின் திருமணத்தை அவரை கரம் பிடிக்கவிருக்கும் மணமகனே தடுத்து நிறுத்திவிடுகிறான். திருமணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட தேனிலவிற்கு இந்த பெண் தனியாக செல்கிறாள். அவருக்கு கிடைக்கும் அனுபவங்களும், அதன் மூலம் அவர் பெறும் படிப்பினைகள் தான் இந்த படத்தின் கதை. இதில் காஜல் அகர்வால் அற்புதமாக நடித்திருக்கிறார் என்றும் பாராட்டு தெரிவிக்கிறார்கள் படக்குழுவினர்.