இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு  முயற்சி தொடர்பாக மூண்ட சர்ச்சை அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த முயற்சியில் இந்தியாவுக்கு சம்பந்தமிருப்பதாக கூறப்பட்ட செய்திகளை நிராகரித்ததையடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.

 

உண்மையில், இரு நாடுகளுக்கும் இடையிலான நெடுங்கால உறவுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அத்தகைய ஒரு சர்ச்சை ஒருபோதும் மூண்டிருக்கவே கூடாது.கொலைச்சதி முயற்சி பற்றிய செய்திகள்,  பிராந்தியத்தில் ஏற்பட்ட பல்வேறு சச்சரவுகள் மற்றும் நிகழ்வுகளின் விளைவாக முக்கியமான சில அயல்நாடுகளுடன்  இந்தியாவின் உறவுகள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்ற ஒரு நேரத்தில் இரு நாடுகளினதும் தலைமைத்துவங்களுக்கு இடையிலான தொடர்பாடல்களில் இருக்கக்கூடிய குறைபாட்டையே உணர்த்திநிற்கின்றன.

இலங்கையில் சீனா கணிசமானளவுக்கு காலூன்றிவிட்டது.சீனாவிடம் வாங்கிய கடன்களை இலங்கையினால் திருப்பிச்செலுத்முடியாமல் போனதையடுத்து கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் அதனைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனா பொறுப்பேற்றிருக்கிறது. சீனா இப்போது இந்தியாவில் இருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதும் முக்கியமான வர்த்தக மற்றும் இராணுவ கடல்வழிப் பாதைகளை நோக்கியவாறு அமைந்திருக்கின்றதுமான பிராந்தியமொன்றில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.

சீன நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பல பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை நேபாளம் ரத்துச் செய்திருக்கின்ற போதிலும் , அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவும் இந்தியாவும் பங்தேற்கவேண்டுமென்று தான் எதிர்பார்ப்பதாக அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியிருக்கிறார்.திபெத்தையும் காத்மாண்டுவையும் இணைக்கின்ற ஒரு ரயில் பாதை உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் சீனாவின் முயற்சிகளுக்கு நிகராக செயற்படவேண்டிய ஒரு  நிர்ப்பந்த நிலையில் இந்தியா இப்போது இருக்கிறது.

மாலைதீவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் சீனா தன்னை உறுதியாக ஆதரிக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக இந்தியாவிடமிருந்தும் தனது எதேச்சாதிகாரப் போக்குகளை எதிர்த்த ஏனைய நாடுகளிடமிருந்தும் வந்த நெருக்குதல்களை அலட்சியம் செய்து துணிச்சலுடன செயற்படக்கூடியதாக இருந்தது. தேசிய பிரஜைகள் இடாப்பில் இருந்து நீக்கப்பட்டவர்களை பங்களாதேஷுக்கு திருப்பியனுப்பப்போவதாக இந்திய அரசியல்வாதிகள் விடுக்கின்ற அச்சுறுத்தல் காரணமாக பங்களாதேஷ் அரசியல் தலைவர்களுக்கு மனக்கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.பங்களாதேஷில் வசிக்கின்ற இலட்க்கணக்கான றொஹிங்கியா அகதிகளை மியன்மார் திருப்பியழைப்பது தொடர்பான விவகாரத்தில் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இந்தியா கடைப்பிடிப்பதாக தோன்றுகின்ற மௌனமும் பங்களாதேஷ் தலைவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காலநிலை மாற்றம், வர்த்தகம் மற்றும் பல்துருவ உலக ஒழுங்கைக் கட்டியெழுப்புதல் போன்ற முக்கியமான உலகப் பிரச்சினைகளில் முன்னணி பாத்திரத்தை இந்தியாவினால் வகிக்கக்கூடியதாக இருக்கின்றது.அமெரிக்கா போன்ற வல்லரசுகளிடமிருந்து வருகின்ற நெருக்குதல்களை அலட்சியம் செய்து ரஷ்யாவிடமிருந்து எஸ் -- 400 ஏவுகணைகளை கொள்வனவு செய்யவும் இந்தியாவினால்  இயலுமாக இருக்கிறது.இவ்வாறாக உலகப் பிரச்சினைகளிலும் கேந்திரமுக்கியத்துவ விவகாரங்களிலும் முனைப்புடன் செயற்படுகின்ற இந்தியாவின்  கொள்கை வகுப்பாளர்களின் தீர்மானங்களை எடுப்பவர்களினதும் ராடாரில் இருந்து அயல்நாடுகள் எவ்வாறு நழுவிச்செல்ல முடிந்தது என்பதை உண்மையில் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. அதுவும் குறிப்பாக அயல்நாடுகளுக்கே முன்னுரிமை என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்கின்ற மோடி அரசாங்கத்தின் கீழ் இவ்வாறு நடந்திருக்கிறதே என்பது ஆச்சரியம் தருகிறது.

இந்தியாவின் பெரிய அயல்நாடான பாகிஸ்தானுடனான உறவுகள் முற்றாக ஒரு ஆழமான உறங்குநிலைக்குச் சென்றிருக்கும் ஒரு நேரத்தில், போரினால் சின்னாபின்னப்பட்டுக்கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தானில் வன்மமுறைகள் கடுமையாக அதிகரித்திருக்கும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளில் எந்தவொன்றுடனுமான உறவுகளைத் தேயவிடுவது புதுடில்லிக்கு கட்டுப்படியாகாத ஒரு நிகழ்வுப்போக்காகும்.

( இந்துஸ்தான் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கம் 19 அக்டோபர் 2018)