(எம்.நியூட்டன்) 

யாழ். மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் கையூட்டு வாங்கினார் என்ற குற்றச்சாட்டை குறித்த சங்கத்தின் புதிய தலைவர் முன்வத்ததையடுத்தே இந்த மோதல் சம்வம் ஏற்பட்டுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற் சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவர் என 8 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்  புதன்கிழமை முற்படுத்தப்பட்டனர். இரு  தரப்புகளும் திருநகர் பகுதியில் மோதலில் ஈடுபட்டனர் என்று பொலிஸாரால் நீதிமன்றில் அறிக்கை முன்வைக்கப்பட்டது.. 

முன்னாள் தலைவர் கையூட்டுப் பெற்றதாக புதிய தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதுதொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்கச் சென்ற போதே, அவரது தரப்புகள் முன்னாள் தலைவரைத் தாக்கினார்கள்" என்று முன்னாள் தலைவரின் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். 

முன்னாள் தலைவர் கைய்யூட்டுப் பெற்றார் என்று தற்போதைய தலைவருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவை தொடர்பில் விசாரித்த போதே முன்னாள் தலைவரும் அவரது தரப்புகளும் தற்போதைய தலைவரையும் ஏனையோரையும் தாக்கினார்கள் என்று புதிய தலைவரின் தரப்புச் சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான் 8 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்