(ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்)

ஜனாதிபதிக்கு எதிரான கொலை  முயற்சி தொடர்பில்  முழுமையான  பரந்துபட்ட  விசாரணை  அவசியமாகும்.  இதனை  குறைத்து மதிப்பிடுவதற்கும் மூடி மறைப்பதற்கும்  சில அரசியல் மற்றும் பல்வேறு  தரப்பினர் முயற்சிக்கின்றனர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களான ஷிரால் லக்திலக்க மற்றும் சரத் கோங்காகே ஆகியோர் தெரிவித்தனர். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

ஜானாதிபதியின் கொலை சதி விவகாரம் தொடர்பான தகவல் ஊடகங்களை பொறுத்தவரையில் பரபரப்பான நல்லதொரு செய்தியாகும். ஆனால் இந்த சம்பவத்தின் தீவிர தன்மை தொடர்பில் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

நாட்டின் தலைவரை கொலை செய்ய சதி இடம்பெறுகின்றமையை கேலிக்கையாக பார்க்க முடியாது. ஜனாதிபதி கொலை சதி தொடர்பில் ஊடகங்களே முதலில் வெளிச்சத்துக் கொண்டு வந்தன. எனினும் தற்போது இவ்விடயம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் வரலாற்றில் அரச தலைவர்கள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசியல் சதிகள் உள்ளன. எனவே இந்த விடயத்தை மூடிமறைக்க முயற்சி செய்யக்கூடாது.

உலக நாடுகளிலும் பல அரசியல் தலைவர்கள் அரசியல் சதியால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்றே தற்போதை நாட்டின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவையும் கொலை செய்ய சதி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

ஜனநாயக நாட்டில் ஒருவரின் உரிமை அடுத்தவரின் உரிமை பாதிப்பதாக அமைந்து விடக்கூடாது. இந்தியாவும் இலங்கையும் ஜனநாயக நாடுகள். இந்தியாவில் கூட மகாத்மா காந்தி, இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

ஒருநாட்டில் அரச தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட போகின்றது என்றால் அவரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளன.

ஜனாதிபதி கொலை சதி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு முன்னெடுத்து வருகின்றது. விசாரணைகள் மந்தகதியில் இருந்தாலும் எமக்கு திருப்தியளிப்பதாகவே உள்ளது.

இதற்கிடையில் பொய்யான பிரசாரங்கள் எமது சமூகத்தினரிடையே பரப்பப்ட்டு வருகின்றன.

இந்த கொலை சதி விவகாரம் உண்மையா அல்லது பொய்யா என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியமாகும்.

கொலை சதி தொடர்பில் தெரியப்படுத்திய நபரின் பின்புலம் தொடர்பில் ஆராயவோ அல்லது அவர் தொடர்பில் விமர்சனங்களையோ முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர்கள் கூறிய விடயம் என்ன? அந்த விடயத்தின் தீவிரத்தன்மை தொடர்பிலே ஆராய வேண்டும். நீதியின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றமே அதன் உண்மை தன்மை தீர்மானிக்க வேண்டும்.

நாமல் குமார மற்றும் நாலக சில்வா ஆகியோர் கலந்துரையாடிய குரல் பதிவுகள் ஒத்துப்போவதா இரசாயன பகுப்பாய்வில் ஊஜிதமாகின. எனினும் நாலக சில்வாவுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்காமல் இருந்தை சந்தேகத்தை தோற்றுவித்தது.

அரசாங்கத்தில் உள்ளவர்களும் எதிர் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் மாற்றுக் கருத்துக்களை கூறி இந்த விடயத்தை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.