(எம்.மனோசித்ரா)

துறைமுகத்திலிருந்து தரையிறக்குவதற்கான செலவீனம், செயன்முறை செலவீனம், நிர்வாக செலவு மற்றும் வரி உள்ளிட்ட நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என  நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இதன் மூலம் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கேற்ப உள்நாட்டிலும் விலை அதிகரிப்பதைப் போன்று உலக சந்தையில் விலை குறையும் உள்நாட்டிலும் குறைவடையும் எனவும் தெரிவித்தார். 

நிதி அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் எம்மால் அவதானிக்கப்பட்ட வகையில் இம்மாதம் எரிபொருட்களுக்கான வரியை நோக்கும் போது இந்தியாவில் பெற்றோலுக்கு 82.17 வீதமும், டீசலுக்கு 57 வீதமும், இங்கிலாந்தில் பெற்றுறோலுக்கு 178 வீதமும், டீசலுக்கு 180.27 வீதமும் வரி அறவிடப்படுகின்றது. எனினும் இலங்கையில் பெற்றோலுக்கு 53.68 வீதமும், டீசலுக்கு 25.48 வீதம் மாத்திரமே வரி அறவிடப்படுகின்றது. 

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டே எரிபொருள் விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கான எரிபொருள் விலையினை கணிப்பிட முடியும். எனினும் இவ்வாறான மாற்றங்களுக்கு அமெரிக்க தலைவரின் சில விடயங்களும் காரணமாக அமைகின்றன.