மன்னார் முள்ளிக்குளத்தில் ஊர் மனை வீடுகளில் கடற்படையினர் குடும்பங்களுடன் இருக்க, அவற்றின் உரிமையாளர்களான குடும்பங்கள் காட்டுப் பிரதேசத்தில் தரப்பாள் கொட்டில்களில் தஞ்சமடைய நேர்ந்துள்ளது. இந்த அவலம் ஆறு வருடங்ளுக்கு மேலாகத் தொடர்கின்றது. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காகத் திரும்பி வந்த மக்களை கடற்படையினர் ஊருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கவில்லை. 

ஊருக்கு வெளியே மலங்காடு என்ற காட்டுப்பிரதேசத்தில் கொட்டில்களை அமைத்துத் தங்கிய அந்த மக்களை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு கடற்படையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தினர். அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராடினார்கள். 

அந்த போராட்டத்தின் விளைவாக முள்ளிக்குத்தில் உள்ள பூர்வீக ஆலயமாகிய பரலோகமாதா ஆலயத்தையும். அருகில் உள்ள பாடசாலை சூழலையும் கையளித்த படையினர், ஊருக்குள் 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்தார்கள்.

 

கடந்த வருடம் அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நூறு ஏக்கருக்கப் பதிலாக குளத்துப்பிரதேசத்தை உள்ளடக்கிய பள்ளமான பிரதேசத்தில் 70 ஏக்கர் காணிகள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளது. 

சிறிய மழை பெய்தாலும் வெள்ளக்காடாக மாறுகின்ற அந்தப் பிரதேசத்தில் கொட்டில்கள் அமைத்து வாழ முடியாத நிலையில் தமது ஆலயச் சூழலில் காடடர்ந்த பிரதேசத்தில் அவர்கள் தரப்பாள் கொட்டில்களை அமைத்துத் தங்கியிருக்கின்றார்கள்.  

அந்தி வேளையிலும் இரவிலும் காட்டு யானைகள் உலாவும் அந்தப் பிரதேசத்தில் மிகுந்த அச்சத்துடனேயே அவர்கள் தங்கியிருக்கின்றார்கள்.

ஊருக்குள் செல்வதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வெறும் உறுதிமொழிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. ஆனால் மீள்குடியேற்றத்திற்கு வழிசெய்யப்படவில்லை என அவர்கள் மிகுந்த கவலையோடு கூறுகின்றார்கள்.

மன்னாரில் இருந்து சிலாவத்துறை வழியாக வில்பத்து சரணாலயம் ஊடாக கற்பிட்டிக்கும் புத்தளத்திற்கும் செல்கின்ற நெடுஞ்சாலையில் உள்ள மறிச்சுக்கட்டி கிராமத்திற்கு அடுத்ததாக முள்ளிக்குளம் அமைந்துள்ளது. கடலோரக் கிராமமாகிய இங்கு செல்கின்ற பிரதான நுழைவாயிலில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளார்கள். 

அந்த முகாமுக்கு அருகில் சேறும் சகதியுமுள்ள ஒரு பாதையை அமைத்து அந்தப் பாதையின் ஊடாகவே ஊர் மக்கள் போய்வர வேண்டும் என்று கடற்படையினர் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றார்கள். ஊர் மனையில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் செப்பனிடப்பட்ட வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். 

தேசிய பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினர் பொதுமக்களுக்குப் பாதகமான முறையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். படையினர் பயன்படுத்தும் வீதியில் பொதுமக்கள் போய்வருவது எந்த வகையில் தேசிய பாதுகாப்புக்குப் பாதகமாக அமையும் என்றும் அவர்கள் வினவுகின்றார்கள்

பரலோகமாதா ஆலயச் சூழலில் விடுவிக்கப்பட்டுள்ள காட்டுப்பிரதேசத்தை தொண்டு நிறுவனம் ஒன்ற காடழித்து தற்காலிகக் கொட்டில்கள் அமைப்பதற்கு வசதி செய்ய முன்வந்துள்ளது. 

முள்ளிக்குளத்தில் 27 ஏக்கர் உட்பட வடக்கு கிழக்கில் 79 ஏக்கர் காணிகளை மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாத நிலைமையும் தொடர்கின்றது.

இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.