குப்பையால் கேள்விக்குறியாகியுள்ள புத்தளத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் - நடக்கப்போவதென்ன ?

Published By: Digital Desk 4

18 Oct, 2018 | 01:19 PM
image

குப்பை, அரசியல் இரண்டுமே நாறிக்கொண்டு இருக்கின்றன.    அரசியல் வெட்டுக் குத்துகள், அரசியல் காய்நகர்த்தல்கள் என ஒரு புறத்தில் தெற்கு அரசியல் களம் சூடு பிடித்துகொண்டிருக்கும் அதேவேளை, மற்றுமொரு புறத்தில் வரி, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார சுமைகள் அதிகரித்துள்ளன. இந்த பிரச்சினைகளில் சிக்கி தவிப்பது என்னமோ சாதாரண பொதுமக்கள் தான்.

ஆம்..! இன்று இலங்கையின் முக்கிய பிச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. உலக நாடுகள் குப்பை பிரச்சினைக்கு தீர்வைக்கண்டு பல தசாப்தமாகியுள்ளன. ஆனால் குப்பை பிரச்சினையால் மனித உயிர்கள் பலியெடுக்கப்படுவதும், பொதுமக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக போராடுவதுமான துர்ப்பாக்கிய சம்பவங்கள் பதிவாகுவது இலங்கையில் மாத்திரம் தான். ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு எந்தவொரு சமூகம் எதிரானது அல்ல . ஆனால் அந்த அபிவிருத்தி குறித்த ஒரு சமூகத்தின் இருப்பிடத்தையே கேள்விகுறியாக்கும் என்றால் அதற்கு யாரும் உடந்தையாக இருக்கமாட்டார்கள் என்பது ஆணித்தரமான உண்மையாகும். 

அந்தவகையில் புத்தளம் பிரதேச மக்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

தனது 700 தோழர்களுடன் விஜயன் இலங்கைக்கு வந்திறங்கியதில் இருந்தே இலங்கையின் வரலாறு ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் தம்பபன்னி என்ற பிரதேசத்திலேயே விஜயன் வந்திறங்கியதாக வரலாறு கூறுகின்றது. அங்கு இறங்கிய விஜயன் அங்குள்ள மண் செந்நிறமாக இருப்பதை கண்டு இப்பிரசேத்திற்கு தம்பன்னி என பெயரிட்டதாகவும் கூறப்படுகின்றது. எப்படி இருப்பினும் வரலாற்று சிறப்புமிக்க இந்த தம்பன்னி பிரதேசம் இன்று  குப்பை நிரப்பும்  திட்டத்தினால் பேசுபொருளாக மாறியுள்ளது.

புத்தளம் அறுவைக்காடு சேரக்குழி கிராமசேவகர் பிரசேத்தில் முன்னெடுக்கபட உள்ள திண்மக்கழிவு திட்டம் பிரதேச மக்களினால் எதிர்ப்புக்குள்ளாகி வருகின்றது. விஞ்ஞான ரீதியாகவும் சுகாதார ரீதியாகவும் புத்தளம் வாழ் மக்களும் புத்திஜீவிகளும் தாம் ஏன்  இதனை  எதிர்க்கின்றோம் என்ற காரணங்களை கூறி வருவதுடன் அதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த மக்களின் ஆதங்கத்தை வெளிக்கொணர்வதற்காக  எமது குழுவினர் இந்த பிரதேசத்தில் நேரடி கள அறிக்கையிடலுக்காக சென்றிருந்தனர்.

புத்தளம் மாவட்டத்தின் வனாத்துவில்லு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கின்ற பிரதேசங்களில்  கரைத்தீவு மற்றும் எலுவன்குளம் என கிராமங்கள் உள்ளன. இந்த கரைத்தீவு என்ற கிராமத்தில் வடக்கு கரைத்தீவு தெற்கு கரைத்தீவு மற்றும் சேரக்குழி ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. அதேபோன்று எலுவன்குளம் கிராமத்தில் புதிய எலுவன்குளம், பழைய எலுவன்குளம் கங்கேவாடிய என 3 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இதில் கரைத்தீவு கிராமத்தின் சேரக்குழி மற்றும் எலுவன்குளம் கிராமத்தின் புதிய எலுவன்கிராம சேவ பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி அறுவைக்காலு என அழைக்கப்படுகின்றது.

இதில் முதலில் புதிய எலுவன்குள பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த குப்பை கொட்டும் திட்டம் தற்போது சேரக்குழி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே  சுண்ணாம்பு கற்கள் தோண்டப்பட்டுள்ளன. எனினும் சுண்ணாம்பு தோண்டப்பட்ட அந்த குழிகள் மூடப்பட்டு அவை மீண்டும் காடாக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பிரதேசத்தில் மீண்டும் குழிகளை தோண்டியே திண்மக் கழிவுளை போடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அதற்கான நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தை பார்வையிட நாம் அங்கு சென்றிருந்தோம். அடர்ந்த  அமைதியான காடு, ஆங்காங்கு மக்கள் வாழும் குடியிருப்புகள்.  பயங்கரமான காட்டு யானைகள், மிருகங்கள் நடமாடியதற்கான கால்தடங்கள். காட்டின் மத்தியில் நீண்டு செல்லும் தண்டவாளங்கள்.  அதற்கு அப்பால் எம்மால் அங்கு செல்ல முடியவில்லை.  

சிறிதுநேரம் அந்த இடங்களை பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து திரும்பி இந்த திட்டத்துக்கு எதிராக புத்தளம் நகரில் கொட்டில் அமைத்து மக்கள் போராட்டம் செய்யும் இடத்துக்கு சென்றோம்.

இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற வெறியுடன் சிலரையும், ஏன் எமது சமூகத்தையும் மாத்திரம் இலக்கு வைக்கின்றார்கள் என கேள்வியுடன் அமர்ந்திருந்த சில பெண்களையும், என்ன நடக்கின்றது என்று தெரியாமல் அந்த மக்களுடன் இணைந்து எதிர்ப்பு கோஷமிடும் சின்னஞ் சிறுவர்களையும் எம்மால் காண முடிந்தது.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இம் மக்கள், இந்த திட்டத்தால் பல்வேறு விதமான அபாயகரமான விளைவுகள் ஏற்படுவதாகவும் நோய்கள் வருதற்கான அபாயங்கள் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிகாட்டுகின்றனர். எப்படியிருப்பினும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனால் புத்தளம் பிரதேசத்தில் அரசியல் கட்சிகள் மத அமைப்புகள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு ஒருங்கிணைப்பு குழுவை நிறுவி இந்த அறுவக்காடு குப்பை திட்டத்துக்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நாம் முதலில்இந்த புத்தளம் அருவக்காடு குப்பை திட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைக்குழுவின் முக்கியஸ்தரும் பொறியியலாளருமான எஸ்.எஸ்.பி.பி. மரிக்கார் என்பவரை சந்தித்தோம்.

அவர், மனம்திறக்கின்றார் 'புத்தளத்தில் முன்னெடுக்கப்படும் இந்த சேராக்குழி திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தை எதிர்க்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத் உலமா மற்றும் அனைத்து மதங்களினதும் பிரதிநிதிகள் என எல்லோரும் இணைந்து இதனை எதிர்க்கின்றோம். தற்போது இந்த குப்பை கொட்டப்படுவதற்கு நிர்மாணிக்கப்படுகின்ற பிரதேசம் தொடர்பில் முக்கிய விடயத்தை கூற வேண்டும்.

அறுவக்காடு என்பது ஒரு செழிப்பான மண் வளத்தை கொண்ட பிரதேமாகும். இதில் ஐம்பது வீதமான நிலப்பரப்பு கஜு முந்திரிகைக்காக பயன்படுத்தப்படுகின்றது. 23 வீதமான பகுதி பல்வேறு பழ உற்பத்திகளுக்காக பயன்படுகத்தப்படுகின்றது.

அதேபோன்று தென்னையும் உற்பத்தி செய்யப்படுகின்றது. அந்த வகையில் ஒரு வளமான பிரதேசம். இந்த பிரதேசத்துக்கு அருகில் வில்பத்து சரணாலயமும் உள்ளது. கடலும் மிகவும் அருகிலேயே உள்ளது. இங்கு ஏற்கனவே ஒரு சீமந்து ஆலை இருக்கின்றது. இந்த நிறுவனம் பல வருடங்களாக இந்த பிரதேசத்தில் உள்ள சுன்னக் கற்களை அகழ்ந்து வருகின்றது. எனவே அங்கு ஆழமான குழிகள் இருப்பதால் இந்த திண்மக் கழிவுகளை கொண்டு வந்து அங்கு  போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இவை   அந்த குழிகளை நிரப்புவதற்கான வழிகள் எனவும் நியாயம் கூறப்பட்டது.

அதுமாத்திரமன்றி இந்த பிரதேசத்திற்கு நேரடி ரயில் தண்டவாளம் காணப்படுகின்றது. எனவே ரயில் மற்றும் டிப்பர்களை பயன்படுத்தி குப்பை கொண்டுவர முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவக்காலு என்ற பிரதேசத்துக்கு உட்பட்ட எழுவன் குளம் என்ற பகுதியில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கை அதனை எதிர்த்திருந்தது. அத்துடன் வன பரிபாலனசபையும் எதிர்த்தது. அதனால்தான் அறுவக்காடு பிரதேசத்திற்கு உட்பட்ட சேரக்குழி என்ற பிரதேசத்திற்கு இந்த திட்டத்தை இடமாற்றியுள்ளார்கள். சேரக்குழியில்  சுன்னாம்பு கற்கள் தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அவை மீண்டும் காடாக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பிரதேசத்தில் மீண்டும் குழிகளை தோண்டியே திண்மக் கழிவுளை போடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சுற்றாடல் அதிகார சபையால் மறுக்கப்பட்டு வன விலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று புதிய எழுவன்குளம் என்ற பகுதியில் இருந்து மாற்றப்பட்ட இந்த திட்டம் தற்போது சேரக்குழியில் முன்னெடுக்கப்படவுள்ளது. அவ்வாறாயின் மனிதர்கள் சூழ வாழும் பகுதியில் இதனை செய்யலாமா? விலங்குகளை விட மனிதர்கள் கீழ்நிலைக்கு சென்று விட்டார்களா? 

இந்த திட்டம் சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கியது. 274 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த திட்டத்துக்கு 125 மில்லியன் டொலரை உலக வங்கி வழங்க முன்வந்தது. எனினும்  தற்போது உலக வங்கி தனது நிதி உதவியை மீளப்பெற்று விட்டது. 

எனவே இந்த திட்டத்தில் அடிப்படையில் இருந்தே பிரச்சினைகள் ஏற்படுமென்பது  எமது மதிப்பீடாகும். அதுமாத்திரமன்றி அறுவைக்காலு  சேரக்குழி என்பது ஒரு கைத்தொழில் வலயமல்ல. அது மக்கள் வாழும் பகுதி. எனவே அந்த திட்டத்தை அங்கு செய்வதால் இந்த நாட்டின் இயற்கை சமநிலையை பாதிக்க செய்யும். அங்கு வண்டல் தாவரங்கள் உள்ளன. விலங்கினங்கள் வாழ்கின்றன. அதுமாத்திரமன்றி தற்போது குழிகள் தோணடப்படுவதால் அருகில் உள்ள வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடல் வளங்கள் பாதிக்கப்படும். 

அத்துடன் இதில் இரண்டு பிரதான பாதிப்புகள் உள்ளன.  முதலாவதாக இந்த கழிவுகளில் மருந்துப்பொருட்கள் கழிவுகள் இலத்திரனியல் கழிவுகள் நிறபூச்சு கழிவுகள் இராசயனங்கள் என பல்வேறு வகையானவை வரும். இவை ஒரு இடத்தில் குவிக்கப்படும் போது அவை  ஒரு கட்டத்தில் நிலத்தை தொடும். அதன் பின்னர் நிலத்துக்கு அடியில் உள்ள நிலக்கீழ் நீரில் கலக்கும். அந்த நீர்தான் நாம் பாவிக்கும் நீராகும். மேலும் அந்த கழிவு நீர் கடலையும் சென்றடையும் நிலையும் காணப்படுகின்றது. இதனால் பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அது புத்தளம் பிரதேசத்தையே பாதிக்கும்.  இரண்டாவதாக இதில் மீதேன் வாயு உருவாகி வெளியாகும். அது காலநிலை பிரச்சினையை கொண்டுவரும். சுவாசங்களில் கலக்கும். மீதேன் வெடிப்புக்களினால் பல விளைவுகள் ஏற்படும். அதுமாத்திமன்றி இந்த திட்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவது  தொடர்பில் எமக்கு பிரச்சினையுள்ளது இவ்வாறு  மரிக்கார்   விஞ்ஞானபூர்வமான  தகவல்களுடன் தனது குமுறலை வெளிப்படுத்தினார். 

மேலும் கொழும்பில் இருந்து குப்பைகளை இங்கு கொண்டு வந்துபோடுவது என்பது பொருளாதார ரீதியில் பாரிய தீங்காகும். அது பொருளாதாரத்தை பாதிக்கும். அதற்கான போக்குவரத்து செலவு மிக அதிகமாகும். சர்வதேச நியமங்களின் படி அரைமணி நேரத்தில் குப்பைகளை  போக்குவரத்து செய்துவிட வேண்டும். இல்லாவிடின் போக்குவரத்து வழியில் பல சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்படும். இல்லாவிடின் அந்த குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு சுத்தம் செய்து போக்குவரத்து செய்யப்பட வேண்டும். அதுவும் இரண்டு மணிநேரத்தில் செய்ய வேண்டும். ஆனால் கொழும்பில் இருந்து இங்கு குப்பைகளை கொண்டுவர 3 மணி நேரம் எடுக்கும். இதேவிடயத்தை கொழும்பிற்கு அருகில் செய்வதாக இருந்தால் குறைந்த செலவில் இலகுவாக இருக்கும். அதற்கான நடைமுறை திட்டமும் இருக்கின்றது. ஏன் புத்தளத்தை இலக்கு வைக்கின்றார்கள் என புரியவில்லை என்றும்   மரிக்கார்  சுட்டிக்காட்டுகின்றார். 

பொறியியலாளர் மரிக்கார்  தொடர்ந்து  பேசுகையில்,

இதுதொடர்பில் நாம் ஜனாதிபதி பிரதமருக்கு மகஜர் கொடுத்துவிட்டோம். அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறி வருகின்றோம். தற்போது இந்த திட்டத்தை நிறுத்தும் வரையிலான போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம். புத்தள மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வெளியில் இருந்து இங்கு குப்பை வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றன.

ஏற்கனவே நாம் இரண்டு திட்டங்களினால்  பாதிக்கப்பட்டுள்ளோம்.    எமது எதிர்கால சந்ததி பாரிய தீய விளைவுகளை சந்திக்கும் அபாயத்தில் ஏற்கனவே இருக்கின்றோம். புத்தளத்தில் ஏற்கனவே சளி, ஆஸ்த்மா பிரச்சினைகள் உள்ளன. அதேபோன்று  வேறுபல நோய்களும் வர ஆரம்பித்துள்ளன. ஒரு திட்டத்தினால் எங்கள் பெரிய பள்ளி சுவற்றில் கூட சாம்பல் படிந்திருப்பதை காண முடியும். இதுதான் நிலைமையாகும். இந்த குப்பை கொட்டும் திட்டத்துக்கு எதிராக இங்கு அருகிலுள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று  ஆதங்கத்துடன் தனது கருத்தை  மரிக்கார் வெ ளியிட்டார். 

இவ்வாறு சூழலியலுடன் சம்பந்தப்பட்ட வல்லுனர்கள் இந்த விடயங்களை சுட்டிக்காட்டுகின்ற நிலையில் புத்தளத்தில் இந்த திட்டத்துக்கு எதிராக மக்களும்  கருத்து வெளியிட்டு வருகின்றனர். சத்தியாகிரகப்போராட்டம் 15 நாட்களாக தொடர்கின்றன. நேற்று மிகப்பெரிய போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் நாம் புத்தளம் வாழ் பொதுமக்களிடமும்   பேசினோம்.

கரைத்தீவு பகுதியைச் சேர்ந்த அஸ்முகான் என்பவர் குறிப்பிடுகையில், நாம் இந்த திட்டத்தை எதிர்த்து தொடர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளோம். இது எமது உரிமைக்கான போராட்டமாகும். புத்தளத்தில் ஏற்கனவே எமது வாழ்வை அழிக்கும் திட்டங்கள் உள்ளன. இவற்றை புத்தள மக்களிடையே சர்வதிகாரமாக திணித்துள்ளார்கள். அனல் மின்சாரம், காத்தாடி மின்சாரம் சீமெந்து தொழிற்சாலை இரும்பு உருக்கு கூட்டுத்தானம் என்பவற்றால் நாம் பாதிக்கப்பட்டு இருக்னிறோம். இவ்வாறு அடுக்கடுக்காக எம் மக்களை நசுக்கும் திட்டங்கள் வருகின்றன. இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என  அதிகாரத்தில் உள்ளோர்  இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் பிரதேசத்திற்கு அருகில் உள்ள மக்களிடம் அபிவிருத்தி இலஞ்சத்தை வழங்கி மக்களின் மனதை மாற்ற முயற்சிக்கின்றார்கள். அதற்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எனவே உடனே அரசாங்கம் தலையிட்டு இந்த திட்டத்தை தலையிட வேண்டும் என்றார்.

நபூறா என்ற பெண் எம்மிடம் கருத்து பகிர்கையில், புத்தளத்தில் இருக்கும் வளங்களை இந்த திட்டம் அழித்துவிடும். எனவே இது எமக்கு வேண்டாம். ஏற்கனவே பல திட்டங்களினால் புத்தள மக்களை நோய்கள் வாட்டி கொண்டிருக்கின்றன. மேலும் இவ்வாறான திட்டங்கள் வருதால் மக்கள் அதிகம் பாதிப்படைவார்கள். நாங்கள் இதை எதிர்கின்றோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார். 

புத்தளம் மகளிர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

இந்த அறுவைக்காலு குப்பை திட்டம் வேண்டாம். இதில் அதிக தீங்கான விடயங்கள் உள்ளன. இதில் உள்ள நல்ல விடயங்களை கூறுகின்றார்களே தவிர தீங்கானவற்றை கூறாமல் உள்ளார்கள். இது எமது வருங்கால சந்ததியை அழித்துவிடும். மேலும் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து இறுதிவரை இதற்கு எதிராக போராடுவோம் என்றார்.

முஹமட் ஹாப்ளின் என்பவர் குறிப்பிடுகையில், 

நாம் எதற்காக போராடுகின்றோம் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் எம்.பி. க்களும் புரிந்துகொண்டு இருப்பார்கள் என நம்புகின்றோம். எமது ஊருக்கு இதுவரை வந்துள்ள அபிவிருத்தி திட்டங்களை சற்று மீளாய்வு செய்து பாருங்கள். இந்த நாட்டின் அபிவிருத்திக்கு நாம் தடையல்ல. ஆனால் அபிவிருத்தி என்ற பேரில்  மிக பாதகமான செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்கின்றார்கள். எனவே இது எமக்கு வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறுகின்றோம் என்றார்.

தொடர்ந்து அஸ்மின் என்ற இளைஞர் ஒருவர் எம்மிடம் குறிப்பிடுகையில், 

எமது முன்னோர்கள் பல முறை எதிரத்தும் சீமெந்து தொழிற்சாலையையும், அனல் மின்சார நிலையத்தையும் கொண்டுவந்து நிறுவினார்கள். இவற்றின் ஊடாக எமது சந்ததிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளத்தில் உள்ள மக்கள் பல நோய்களை அனுபவிக்கின்றார்கள் . மற்றுமொரு திட்டமாக கொழும்பின் குப்பைகளை இங்கு கொண்டு கொட்ட போகின்றார்கள். சிங்கப்பூர் கொப்பையும் இங்கு வரப்போவதாக தெரிகின்றது. இனதால் அறுவக்காலு புத்தளம் களப்பு மற்றும் வில்பத்து வனம் போன்றவற்றை அழிக்க முற்படுகின்றார்கள் என்றார். 

நவாஸ் என்பவர் குறிப்பிடுகையில்,

 நல்லாட்சி வந்து 3 வருடங்கள் ஆகின்றன. நிம்மதியாக வாழவே நல்லாட்சியை கொண்டு வந்தோம் இதற்கு புத்தள மக்கள் பெரும் பங்களிப்பு செய்தோம் ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நிம்மதி இல்லாமல் இருக்கின்றோம். தற்போது உறங்கி கொண்டிருக்கின்றோம் என்றார்.

தர்சிம் என்பவர் எம்மிடம் கருத்து பகிர்கையில், 

நான் புத்தளம் வேப்பமடு பகுதியை சேர்ந்தவன். டிப்பர்களில் இங்கு குப்பைகளை  கொண்டு வரும் போது இடைநடுவில் பாதிக்கப்படும் பிரதேசங்களில் வேப்பமடுவும் ஒன்றாகும். பாடசாலைகள் உள்ளன. சிறுபிள்ளைகள் புழங்கும் பிரதேசங்கள் உள்ளன. இதனால் பல தீய விளைவுகள் ஏற்படும் என்றார்.

புத்தளம் உப்புநலன் புரி சங்கத்தின் பிரதிநிதி அஸ்மியா காதர் குறிப்பிடுகையில், 

புத்தளத்தில் உப்பு உற்பத்திற்கு பிரதமானது களப்பு நீராகும். அது சேரக்குழிக்கு மிக அருகில் உள்ளது. எனவே களப்பு நீரிலேயே தங்கியுள்ள உப்பு உற்பத்தி பாதிக்கப்படும். இலங்கையின் 34 வீதமான உப்பு தேவையை புத்தளம் நிறைவு செய்கிறது. எனவே இதில் நச்சு தன்மை கலந்தால் நாடு முழுவதும் பாதிக்கப்படலாம் என்றார்.

புத்தளம் இந்து மகா சபையின் தலைவர் நாகராஜா எம்மிடம் மனக் குமுறலை வெளிப்படுத்துகையில், 

ஈழத்தின் வரலாற்றில் திறவு கோளாக தம்பபன்னி என்று அழைக்கப்படும் புத்தளமே அழைக்கப்படுகின்றது. அவ்வாறான புத்தளம் இன்று இலங்கையில் குப்பைகளின் திறவுகோளாக   மாறியுள்ளமை துரதிஸ்டவசமாகும். ஒதுக்குபுறமாகவும் கனியவளமும் காணப்படும் ஒரு பிரதேசத்தில் நாட்டின் குப்பைகளை கொண்டு வருவதற்கான காரணிகளை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த பிரதேசத்தில் நீர் கொடையாக கலாஓயா காணப்பப்படுகின்றது. கலா ஓயாவை சூழ்ந்து காணப்படுகின்ற நீர் பிடிமானமே புத்தளத்தின் உயிர் பிடிமானமாகும். இது புத்தளம் மக்களின் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் விளங்குகின்றது இந்த குப்பை கொட்டு திட்டமானது மக்களின் இருப்பை கேள்வி குறியாக்கியுள்ளது. இயல்பாகவே இந்த பிரதேசம் நோய் காவி பிரதேசமாக உள்ளது. எனவே ஒரு சிலரின் ஆதாயங்களுக்காக புத்தளம் மக்கள் சூதாட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம். எனவே அனைவரும் எதிர்க்கின்றோம் என்றார்.

புத்தளம் இந்துமகா சபையின் செயலாளர் இரத்தனசாமி சிவனேசன் குறிப்பிடுகையில், 

புத்தள பிரதேசத்திற்கு வருகின்ற இந்த குப்பை திட்டம் நல்ல திட்டம் என்று அரசாங்கத்தால் கூறப்படுகின்றது. அப்படி இது நல்ல திட்டம் என்றால் ஏனைய பிரதேசங்களில் உள்ள குப்பைகளை அந்நதந்த இடங்களிலேயே இதே வேலைத்திட்டத்தின் ஊடாகவே செய்யலலாம் அல்லவா? கொழும்பு குப்பை புத்தளத்திற்கு வந்து குப்பை படிமனாக மாறக்கூடாது. நல்லாட்சி அரசில் சகல மக்களும் சமனாக பார்க்கப்பட வேண்டும். எமது பிரதேசம் அரசாங்கத்தால் பாராபட்சமாக பார்க்கப்படுவதாக எமது மக்களிடையே கருத்து நிலவுகின்றது. எனவே அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். அரசாங்கம் ஏன் புத்தளத்தை குறி வைக்கின்றது. இதனால் எதிர்கால சந்ததியினர் அழிவடையும் அபாயம் உள்ளது. புத்தளம் குவேனி வாழ்ந்த ஒரு இராஜதானியாக இருக்கின்றது. குவேனியின் இராஜதானி இன்று குப்பை தொட்டியாக மாறப்போவது ஏன். இந்த கேள்வி பலரது மத்தியிலும் எழுகின்றது என்றார்.

இவ்வாறு மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்ட நாம் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்தோம். காரணம், மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவே இந்த எதிர்ப்பு விடயங்கள் அதிகார மட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். எனினும் புத்தளத்துக்கு என ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத குறையை இந்த மக்கள் அனுபவிக்கின்றனர். எப்படி இருப்பினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் புத்தளம் நகர சபை காணப்படுகின்றது. அந்தவகையில் புத்தளம் நகரப் பிதா, கே. ஏ. பாயிஸை சந்தித்தோம்.

அவர் மனம் திறக்கின்றார். 'அரசியல் தலைமைகள் நிர்வாக தலைமைகள் மதத் தலைவர்கள் என அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை எதிர்த்து போராடுகின்றனர். இந்த போராட்டம் இன்று சூடு பிடித்திருக்கின்றது. .இளைஞர் குழுக்களினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்று தீவிரமடைந்து இருக்கின்றது. அரசாங்கம் இந்த போராட்டத்தை திரும்பி பார்க்காத நிலைமை இருக்கின்றது. அரசாங்கம் இதனை ஏறிட்டும் பார்க்கவில்லை. விசேடமாக அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இதை ஏறிட்டு பார்க்காமல் உள்ளனர். இதுவொரு ஆரோக்கியமான சூழல் அல்ல. இது அடுத்த தேர்தல்களிலும் பாடம் புகட்டுவதற்கு காரணமாக அமைந்து விடும்.  ஜனாதிபதியோ பிரதமரோ பொறுப்பான அமைச்சரோ இதனை ஏறிட்டு பார்க்காமல் உள்ளனர். இதுவொரு சிக்கலான சூழலை இந்த மாவட்டத்தில் ஏற்படுத்தும். இதனால் இந்த மக்கள் என்ன கூறுகின்றார்கள் என்பதை இந்த அரசாங்கம் செவிமெடுக்க வேண்டும். ஜனாதிபதி பிரதமர் தலையிட்டு இதனை மீள்பரிசீலித்து பார்க்க வேண்டும். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வமத குழுவினருடனாவது அரசாங்கம் ஒரு பேச்சுவார்த்தையை  ஆரம்பிக்க வேண்டும் என்றார்.

எவ்வாறு சட்டமுறையில் அணுகலாம்?

பெண் சட்டத்தரணியான நதீஹா அப்பாஸ்  குறிப்பிடுகையில், 

‘பொதுமக்கள் சார்ந்த பிரச்சினை என்பதால் இந்த திட்டத்துக்கு எதிராக கட்டாயம் நீதிமன்றத்தை நாட வேண்டும். பொதுமக்கள் அக்கறை வழக்காடல் என்ற முறையிலாவது அல்லது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான வாழ்வதற்கான உரிமை மீறப்படுகின்றது என்ற முறையிலாவது நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யமுடியும். அடிப்படை மனித உரிமை மீறப்பட்டால் 30 நாட்களுக்குள் மன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோன்று அடிப்படை உரிமை மீறப்பட போகின்றது என கூறப்பட்டால் அதனை தடுக்க வேண்டும் என மன்றில் வழக்குதாக்கல் செய்யலாம். மேலும் இந்த திட்டத்தால் ஏற்படும் பிரச்சினைகளை   மன்றுக்கு தெரிவித்து இந்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த மன்றை கோரலாம்.  இந்த திட்டத்துக்கு எதிராக ஒரு பள்ளிவாசலின் தலைமையின் கீழ் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல் ஒவ்வொரு சமூகமாக ஒவ்வொரு பிரச்சினை காரணிகளை வைத்து பல வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது உலக நாடுகளின்   கவனத்தை திசை திருப்ப முடியும் என்பதோ ஏதோ ஒரு காரணத்தை வைத்து இந்த இடைநிறுத்த முடியும். நீதிமன்றத்தை நாடாமல் ஆர்ப்பாட்டம் மாத்திரம் செய்துகொண்டிருந்தால் அரசாங்கம் அந்த திட்டத்தை நிறைவேற்றி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன என்றார்.

அந்தவகையில் அறுவக்காடு சேரக்குழி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் இதனை முன்னெடுப்பதற்கு   பல காரணங்களை கூறுகின்றது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் ஒரு பிரசேத்தில் ஒரு திட்டத்தை முன்னெடுப்பதால் அந்த பிரதேச மக்கள் கூறும் காரணங்கள் அவர்களது கரிசனைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே தாம் பல திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த மக்கள் கூறுகின்றனர். எனவே புத்தளம்  மக்கள் முன்வைக்கும் காரணங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். இதுதொடர்பில் விரைவில் இந்த மக்கள் மற்றும் புத்தள சமூகத்துடன் அரசாங்க தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

நாம் இந்த கள விஜயத்தின் போது எமது தரப்பில் பல்வேறு தரப்பினருடனும்  பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் அனைவரும் ஒரே விதமான நிலைப்பாட்டில் இருப்பதை கண்டு கொள்ள முடிந்தது. ஒரு சிலர் இந்த திட்டத்தால் பாதிப்புக்கள் இல்லையென தமக்கு அரசாங்க தரப்பால் அறிவுறுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.  இந்த மக்களின் ஆதங்கங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். ஒரு அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுப்பது சிறப்பானதொன்றாகும்.  அபிவிருத்தி திட்டங்கள் அவசியம். ஆனால் அவை  பிரதேச  தன்மைகள் சூழல் மக்களின் கரிசனை ஆகியவற்றை கவனத்திற்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டும். 

இந்த கள அறிகையிடலை செய்வதற்கு எமக்கு பல வழிகளிலும் உதவிய புத்தளம் வலய தமிழ் பாடசாலைகளுக்கான பணிப்பாளர் இஸட். ஏ. சன்ஹிர் ஆசிரியருக்கு  எமது குழுவினர் சார்பில் நன்றிகளை தெரிவித்துவிட்டு  இந்த மக்களின் கரிசனையை வெளிப்படுத்தும் எண்ணத்துடன் நாமும் அலுவலகம் திரும்பினோம்.

- ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27