வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறைப்படுத்தி அவற்றின் உச்சபட்ச நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க தேவையான சகலவித ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஜனாதிபதி  தெரிவித்தார்.

இன்று (17) நண்பகல் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்த போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறைப்படுத்தவும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் அரசியல் விடயங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

எதிர்க்கட்சி தலைவர் ஆர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இதனிடையே தமிழர் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளும் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை மற்றும் அப்பிரதேச மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தமிழர் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.