இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

குறித்த உரையாடலின் போது இந்திய பிரதமர் மோடி எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது இரு நாட்டு தலைவர்களும் நட்பு ரீதியான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், தற்போது இலங்கையில் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினர். 

அத்தோடு இலங்கையின் சுபீட்சத்திற்கும் அபிவிருத்திக்கும் தேவையான அனைத்துவித உதவிகளையும் வழங்குவதாக இந்திய பிரதமர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நட்புறவு தொடர்ந்தும் வலுவுடன் காணப்படுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதோடு. அயல்நாடுகளுடனும் ஏனைய உலக நாடுகளுடனும் நட்புறவையும் நெருக்கமான தொடர்புகளையும் பேணி பாதுகாப்பதற்காக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்தார்.

நெருங்கிய நண்பனாகவும் அயல்நாடு என்ற வகையிலும் இலங்கையின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் இந்தியாவிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்புகளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன்போது பாராட்டினார்.