(எம்.ஆர்.எம்.வஸீம்)

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுவழங்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலாகும். ஆனால் இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்காமல் இருக்கின்றது என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கூட்டு எதிரணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

தனது நாட்டுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடுவழங்கும் நாடு உலகில் எங்கும் இல்லை. 

ஆனால் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு நாட்டை பிளவுபடுத்த ஆயுதமேந்திப்போராடிய குடும்பங்களுக்கு நஷ்டஈடுவழங்க அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானமானது பயங்கரவாதத்துக்கு துணைபோகும் செயலாகும். 

இதன் மூலம் அரசியல் தலைவர்களை கொலைசெய்த மற்றும் அரச நிறுவனங்கள், விகாரைகளுக்கு குண்டுவைத்த புலி உறுப்பினர்கள் இன்று மரணித்திருந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.