அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், தூதுவர்களுக்கான கலாசார பாதுகாப்பு நிதியத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட தூபியை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று திறந்துவைத்தார். 

மொத்தமாக 43 மில்லியன் ரூபாய்களைக் கொண்ட இந்த திட்டத்துக்கான நிதி 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பொது விவகாரங்களுக்கான கொன்சியூலர் டேவிட் மங்வாயர் தூதரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

ரஜகல பௌத்த மடலாய காட்டுப் பகுதியில் உள்ள கட்டடங்கள், குகை வீடுகள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து புனரமைப்பதும் இத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது. 

தூபியுடன் இணைக்கும் நடைபாதை, பொதுக் கட்டடம், தியான சித்திரங்களுடன் கூடிய குகைகள் மற்றும் குறிப்பிடத்தக்க வடிவமைப்புக்களை புனரமைப்பதும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

வரலாற்றுக்கு முந்திய மனித குடியேற்றங்களை அடையாளப்படுத்தும் நோக்கில் மேலதிகமான அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ரீதியான அகழ்வாராய்ச்சியாகவும் அமைந்துள்ளது.

“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட தூபியை பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பதில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்” என மங்வாயர் தெரிவித்தார். 

“இலங்கையில் மனிதர்களின் பண்டைய அனுபவங்களின் அகலத்தை நினைவுபடுத்தக் கூடிய வரலாற்று புராதன முக்கிஸ்தலமாக ரஜகல விளங்குகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

2001 ஆம் ஆண்டு முதல் தூதுவர்களின் கலாசார பாதுகாப்பு நிதியத்தின் ஊடாக இலங்கையில் 13 திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளன. அதில் பௌத்த விகாரைகளை பேணுதல், மட்டக்களப்பு டச்சு கோட்டையை புனரமைத்தல், அநுராதபுரம் தொல்பொருள் நூதனசாலையில் உள்ள பௌத்த, இந்து மற்றும் ஏனைய கலைப் பொருட்களைப் பேணிப் பாதுகாத்தல், ஆதிவாசிகள், தமிழ் மற ;றும் பௌத்த சமூகத்தில் உள்ள அருமையான சடங்குரீதியான இசை மற்றும் நடனங்களைப் பாதுகாத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடங்குகின்றன. 

புராதன இந்து மற்றும் கலைப் பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை ஒக்டோபர் 5 ஆம் திகதி பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் ஆரம்பித்துவைத்திருந்தார். 

இது பற்றி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்த கருத்துக்களை பின்வரும் இணையத் தொடர்பில் பார்க்கலாம், https://lk.usembassy.gov/charge-daffaires-robert-hiltons-remarks-at-inauguration-of-afcp-grant-at-the-university-of-jaffna/.

தூதுவர்களுக்கான கலாசார பாதுகாப்பு நிதியமானது நாடளாவிய ரீதியில் உள்ள 100 நாடுகளில் கலாசார பகுதிகள், கலாசாரப் பண்டங்கள் மற்றும் பாரம்பரிய கலாசார வெளிப்படுத்தல்கள் என்பவற்றைப் பாதுகாக்க உதவிவருகிறது. 

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணையத் தொடர்பில் பெற்றுக்கொள்ளலாம். https://eca.state.gov/cultural-heritage-center/ambassadors-fund-cultural-preservation