இஸ்தான்புல் மர்மம் ; ஜமால் கஷொக்கி காணாமல் போனது குறித்து......!

Published By: Vishnu

17 Oct, 2018 | 05:18 PM
image

சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷொக்கி காணாமல்போன விவகாரம் இராஜதந்திர சூறாவளியொன்றை தோற்றுவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் துருக்கி உட்பட பல நாடுகளும் ஐக்கிய நாடுகள் போன்ற சர்வதேச அமைப்புகளும் உண்மையை வெளிப்படுத்துமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு நெருக்குதலை கொடுத்துக்கொண்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதிவந்த பத்திக்காக உலக அரங்கில் நன்கு அறியப்பட்டவரான கஷொக்கி சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானை கடுமையாகக் கண்டித்து வந்தவர்.அக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்குள் சென்ற பிறகு அவர் காணாமல்போயிருக்கிறார். துணைத்தூதரகத்திற்கு கஷொக்கி செல்வதைக் காண்பிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டிருக்கும் துருக்கி அதிகாரிகள் அவர் அந்த கட்டிடத்திற்குள் இருந்து வெளியேறுவது தொடர்பில் எந்த வீடியோ பதிவும்  இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

விவாகரத்து அத்தாட்சிப்பத்திரம் ஒன்றைப் பெறுவதற்காக துணைத்தூதரகத்துக்கு வருகை தந்த கஷொக்கி பத்திரமாக வெளியேறினார் என்று கூறும் சவூதி அரேபியா அதற்கான சான்று எதையும் காண்பிக்கவில்லை. அவரை திருமணம் செய்யவிருந்த துருக்கிய பெண்மணி துணைத்தூதரகத்திற்கு வெளியே பல மணிநேரமாக காத்திருந்தார். உள்ளே போனவர் ஒருபோதும் வெளியே வரவில்லை என்று அந்தப் பெண்மணி உறுதியாகக்கூறுகிறார். கஷொக்கிக்கு நேர்ந்திருக்கக்கூடிய கதி பற்றி ஏற்கெனவே பல கதைகள் உலவுகின்றன.அவற்றில் மிகவும் பயங்கரமான கதை அவர் துணைத்தூதரகத்திற்குள் வைத்துக் கொல்லப்பட்ட பிறகு சடலம் துண்டுகளாக வெட்டப்பட்டது என்பதாகும். அவர் துணைத்தூதரகத்துக்கு வந்த அதே தினம் சவூதி அரேபியாவில் இருந்து வருகை தந்த 15 பேர் கொண்ட குழுவொன்று அந்த கட்டிடத்திற்குள் தங்கியிருந்திருக்கிறது. தடயவியல் நிபுணர் ஒருவர் உட்பட இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அந்தக் குழுவில் அடங்கியிருந்ததாகவும் அவர்கள் கஷொக்கி பிரவேசித்த இரு மணித்தியாலங்களுக்குள் அவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் துருக்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கஷொக்கி கொலைசெய்யப்பட்டார் என்ற தகவல்களை இதுவரையில் சவூதி அரேபியா  நிராகரித்திருக்கிறது. ஆனால், சவூதி அதிகாரிகள் கூறுவதைப் போன்று  துணைத்தூதரகத்தில் இருந்து அவர் வெளியேறியிருந்தால், அதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உரியதாகும்.அவர் பத்திரமாக வெளியேறினார் என்று மாத்திரம் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டிருப்பதைத் தவிர அவருக்கு என்ன நேர்ந்தது என்பதற்கான நம்பகமான ஒரு விளக்கத்தையேனும் தர இயலாதவர்களாக சவூதி அதிகாரிகள் இருக்கிறார்கள்.

கஷொக்கி காணாமல் போய் 13 நாட்கள் கழித்தே துணைத்தூதரக வளாகத்தை சோதனையிடுவதற்கு துருக்கி அதிகாரிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சவூதியின் 33 வயதான முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் உறுதியான ஒரு ஆதரவாளரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட , பத்திரிகையாளர் காணாமல் போனதற்கு சவூதி அரசாங்கமே பொறுப்பு என்று கண்டுபிடிக்கப்படுமானால் ' கடுமையான தண்டனை ' கிடைக்கும் என்று எச்சரிக்கை செய்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த சர்ச்சை 21 ஆம் நூற்றாண்டுக்குள் சவூதி அரேபியாவை வழிநடத்திச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்ட ஒரு சமூக, பொருளாதார சீர்திருத்தவாதி என்று தன்னைப்பற்றி ஒரு படிமத்தை உருவாக்குவதற்காக கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்துகொண்டிருக்கின்ற  ( எம்.பி.எஸ். என்று பரவலாக பிரபல்யமான) முடிக்குரிய இளவரசருக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஜே.பி.மோர்கன், பிளக் ஸ்ரோன் அன்ட் பிளக்றொக் உட்பட சில பெரிய முதலீட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் அடுத்தவாரம் றியாத்தில் நடைபெறவிருக்கும் முதலீட்டாளர்கள் மகாநாடொன்றில் பங்குபற்றப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.அநத மகாநாட்டில் எம்.பி.எஸ். உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கஷொக்கி பற்றிய உண்மையை உலகிற்குத் தெரியப்படுத்துவதில் காண்பிக்கப்படக்கூடிய எந்தவொரு தாமதமும் சவூதி அரேபியாவுக்கு பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. படுமோசமான மனித உரிமைகள் மீறல்களுக்காக சவூதி ஏற்கெனவே கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறது.சவூதியின் முக்கியமான நேச அணியான அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் கஷொக்கி விவகாரத்தில் உண்மை வெளியிடப்படும் வரை அந்த இராச்சியத்தின் மீது நெருக்குதல்களைத் தொடர்ந்து பிரயோகிக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பொன்றைக் கொண்டிருக்கிறது.

(த இந்து ( ஆங்கிலம்) ஆசிரிய தலையங்கம், 17 அக்டோபர் 2018)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48