பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று பதுளை அரசினர் மருத்துவ மனையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.பதுளை பிரதான சிறைச்சாலையில் ஆறு வருடங்களை சிறைவாசம் அனுபவித்து வந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய சிறைக் கைதியே தப்பிச் சென்றுள்ளார்.

சிறைவாசம் அனுபவித்து வந்த இந் நபர் திடீர் நோய்வாய்ப்பட்டதையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை கடனை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியதும் சிறைக்காவலரினால் மாட்டப்பட்டிருந்த கைவிலங்கு கழட்டப்பட்ட பின்னர் மலசல கூடத்தின் பின்புற வழியில் தப்பிச் சென்றுள்ளார்.

பல மணி நேரம் சிகிச்சை பெறும் இடத்திற்கு திரும்பாததால் சிறைக்காவலர் மலசல கூடத்திற்கு சென்று பார்த்தபோது பின் புற வழியில் கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்று இக் கைதியைத் தேடி பதுளை சிறைக்காவலர்கள் பதுளைப் பொலிசாருடன் இணைந்து நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர்.