இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் மோதல் நிலவிய காலப் பகுதியில் முப்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட தனியார் காணிகளை காணி உரிமையாளர்களுக்கு விடுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் கீழ்  இலங்கை கடற்படை பொறுப்பிலிருந்த மன்னார், முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள 23 ஏக்கரும் முல்லைத்தீவு. முல்லி வாய்க்காலில் அமைந்துள்ள 53 ஏக்கர் நிலப்பரப்பும்  இலங்கை இராணுவத்தின் 224 ஆவது படைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ள திருகோணமலை தோப்பூரில் 3 ஏக்கர் காணியையும் ஆரம்ப உரிமையாளரிடம் விடுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அதேபோன்று இந்தப் பிரதேசங்களில் குடியமர்த்தப்படவுள்ள பொதுமக்களுக்கு தமது  வாழ்வாதாரத்தை  நிலையான வகையில் முன்னெடுக்கக் கூடிய வகையில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று குளங்களை சீர்செய்து  அந்தப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்து அவற்றை ஆரம்ப உரிமையாளரிடம் கையளிக்கப்பட வேண்டும். 

இதற்கமைவாக தற்பொழுது முப்படையினரால் பயன்படுத்தப்படும் காணியை விடுவிக்கக் கூடிய வகையில் இவற்றை புனரமைப்பதற்கும் அந்தப் பிரதேசங்களில் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவும் தேவையான  நிதி வழங்குவதற்காகவும்  மீள் குடியமர்வு புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துக் கலாசார அலுவல்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதற்கு  அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.