(இரோஷா வேலு) 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அல்ஜிரியாவுக்கு போலி வீசாவில் செல்ல முற்பட்ட நபருடன், அவருக்கு நிதி வழங்கி உதவிய மேலும் இரண்டு சந்தேகநபர்களும் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  பெதுருதுடுவ, மன்னார் மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்த மூன்று ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது போலி வீசாவில் குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்லமுற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் அவரை கைதுசெய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் போலி வீசாவின் மூலம் கட்டாரினூடாக அல்ஜீரியாவுக்கு செல்ல முயற்சித்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரிடம் பெறப்படப்பட்ட வாக்குமூலத்தினூடாக அவருக்கு நிதியுதவி வழங்கிய மேலும் இருவர் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே குறித்த மூவரையும் கைதுசெய்துள்ள விமான நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் அவர்களை இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்ததோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.