சாபக்கேடாகப் போயுள்ள சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் 

Published By: Vishnu

16 Oct, 2018 | 06:57 PM
image

ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)வினால் கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் குறிப்பிட்ட சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையாக இருப்பதாகவும் அந்தப் பிரிவுகள் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இதை கடந்தவாரம் பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த விஜேசிறி அறிவித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதலாக பல தசாப்தங்களாக  அதற்கெதிராக குரலெழுப்பிவந்த பல அரசியல் கட்சிகள் ஜே.வி.பி.யின் இந்த 20 திருத்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது விசித்திரமானதாக இருக்கிறது. இந்த கட்சிகள் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தன.ஜே.வி.பி.யும் அதே நோக்கத்திற்காகவே சட்டமூலத்தைச் சமர்ப்பித்திருந்தது.அதனால் ஜே.வி.பி.இப்போது அனேகமாக சகல அரசியல் கட்சிகளினதும் அரசியல் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது எனலாம்.

இலங்கைக்கு பொருத்தமான ஆட்சிமுறை வடிவம் என்ற வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியை  அல்லது வேறு எந்தவொரு முறையையும் ஆதரிப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அல்லது தனிநபருக்கும் உரிமை இருக்கிறது.அதேபோன்றே எதிர்ப்பதற்கும் உரிமை இருக்கிறது .ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்று நிலைப்பாட்டை கடந்த காலத்தில் ஆதரித்த ஒரு அரசியல் கட்சி, 20 வது திருத்த யோசனையை ஜே.வி.பி.முன்வைத்த  காரணத்தால்  அல்லது குறிப்பிட்ட நபர் ஒருவர் அண்மைய எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வருவதை விரும்புகின்ற காரணத்தால் எதிர்க்கிறது என்றால் அது அரசியல் பாசாங்குத்தனமேயன்றி வேறொன்றுமில்லை.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த காலத்தில் முன்வைத்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது தனிநபரோ 20 வது திருத்த யோசனையின் குறிப்பிட்ட சில பிரிவுகள் தேசிய பாதுகாப்புக்கு அல்லது தேசிய நலன்களுக்கு குந்தகமானவை என்ற அடிப்படையில் அத் திருத்தத்தை எதிர்ப்பதாக இருந்தால் அதைப் புரிந்துகொள்ளமுடியும்.ஆனால் , அத்தகைய ஒரு கட்சியோ அல்லது தனிநபரோ சட்டமூலத்தை ஒட்டுமொத்தமாக  எதிர்ப்பதாக இருந்தால் அதற்கான பெறுமதாயனதும் அறிவுபூர்வமானதுமான காரணத்தை முன்வைக்கவேண்டும்.

 பிரதான அரசியல் கட்சிகள் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் நாட்டுக்கு பொருத்தமான ஆட்சிமுறை தொடர்பில் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பதன் மூலமாக குறிப்பாக தங்களின் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் பொதுவில் நாட்டு மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள்.இந்த அரசியல் தலைவர்கள் தாங்கள் உயர்பதவிகளை வகிப்பதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புகளை அடிப்படையாகக்கொண்டு தஙகளது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எதிரணியில் இருக்குமபோது தற்போதைய ஆட்சிமுறையை எதிர்க்கிறார்கள்.ஆனால், அதிகாரத்தில் இருக்கும்போது அதை எதிர்ப்பதில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற சகல ஜனாதிபதி தேர்தல்களின்போதும் பாராளுமனறத் தேர்தல்களின்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிகள் அதிகாரத்துக்கு வந்தால் அந்த ஆட்சிமுறையை ஒழித்துவிடப்போவதாகவே நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தன. சிறிமா பண்டாரநாயக்க (1988 ), சந்திரிகா குமாரதுங்க ( 1994 &2000) மற்றும் மகிந்த ராஜபக்ச ( 2005 &2010)ஆகியோர் அந்த வாக்குறுதிகளை அளித்தார்கள்.1988 ஜனாதிபதி தேர்தலில் திருமதி பண்டாரநாயக்கவினால் அதிகாரத்துக்கு வரமுடியாமல்போன சந்தர்ப்பத்தைத் தவிர. 

மற்றும்படி திருமதி குமாரதுங்கவும் ராஜபக்சவும் நாட்டு மக்களை ஏமாற்றினார்கள்.ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை  பிரதான வாக்குறுதியாக முனவைத்துக்கொண்டே இன்றைய ஆட்சியாளர்களும் அதிகாரத்துக்கு வந்தார்கள்.எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வரவிருந்த நிலையில் 2014 நவம்பர் 21 மைத்திரிபால சிறிசேன முதன்முதலாக கலந்துகொண்ட செய்தியாளர் மகாநாட்டில் ' தனிமனிதரின் ஆட்சியை' இல்லாதொழிப்பதைத் தவிர வேறு எதுவும் தனது பிரதான வாக்குறுதி அல்ல என்றுதான் பிரகடனம் செய்தார்.

ஜனாதிபதி ஆட்சியை இல்லாதொழிப்பதாக உறுதியளித்துக்கொண்டு இரு தடவைகள் ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்று  சுமார் பத்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் இப்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டால் பிரிவினைவாதம் வலுவானதாகிவிடும் என்று வாதாடுகிறார்கள். பிரிவினைவாதிகள் என்று மகிந்த விசுவாசிகள் வர்ணிக்கின்ற விடுதலை புலிகள் நாட்டின் ஒரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளையில் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுத்தவர்கள் இப்போது பிரிவினைவாதப் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் நிறைவுபெறுவதற்கு ஏழு மாதங்களே இருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆட்சியே தொடரவேண்டும் என்று வாதிடுகிறார்கள்.

இதே போன்ற சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையே தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் பல அரசியல் கட்சிகள் கடைப்பிடித்துவருகின்றன.மகிந்த ராஜபக்சவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் முக்கியமான அமைச்சர்களாக பதவிவகித்த ஸ்ரீலங்காசுதந்திர கட்சி தலைமையிலான கூட்டரசாங்கம் ஒன்றின் கீழேயே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி ஆட்சிமுறை யோசனை பல தடவைகள் ( 1995, 1997& 2000) முன்வைக்கப்பட்டது.2002 ஆம் ஆண்டில் பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத் தூதுக்குழுவே விடுதலை புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது சமஷடி முறையின் அடிப்படையிலான தீர்வு குறித்து ஆராய இணக்கம் தெரிவித்தது. விடுதலை புலிகள் பலம்வாய்ந்த ஒரு சக்தியாக இருந்தபோது நாட்டில் சமஷ்டிமுறையை அறிமுக்ப்படுத்துவதற்கு முயற்சித்த அத்தகைய அரசியலவாதிகள்தான் இன்று அதே சமஷ்டியை பேய்பிசாசாகக் காட்டுகிறார்கள்.

இவ்வாறாக காலங்காலமாக அரசியல்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் படுமோசமான சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுத்துவந்த காரணத்தினால்தான் நாடும் மக்களும் எதிர்நோக்குகி்ற எரியும் பிரச்சினைகளில் எந்தவொன்றுக்குமே தீர்வைக்காணமுடியாமல் இருக்கிறது.

( ஒரு செய்தி ஆய்வு )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18