யாழில். முச்சக்கர வண்டியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டதாக செய்தி வெளியாகிருந்த நிலையில், குறித்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதியின் வாக்குமூலத்தின் மூலம், கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட யுவதி முச்சக்கரவண்டி சாரதியின் மனைவி எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், செம்மணி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு நோயை குணமாக்குவதற்கான பிரார்த்தனைகளை மேற்கொள்ளும் பொருட்டு அழைத்துச் சென்ற நிலையில்  நோய் தீவிரமடைந்தமையினால் அவரை கட்டி முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்து வீசப்பட்ட ஆடை, அவர்களுடைய மகளினுடையது எனவும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த யுவதி அதனை தன்னுடைய கையில் வைத்திருந்த நிலையில் வீதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.