இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டிகளின் பெண்களுக்கான தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை, தடம்பதிக்க வழிவகுத்தார்.

ஆர்ஜன்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 3 ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டி இடம்பெற்று வருகின்றது.

இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் வீர, வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர். இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகையான விளையாட்டுக்களில் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று இடம்பெற்ற பெண்களுக்காக  2 ஆயிரம் மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியிலேயே பாரமி வசந்தி, 3 ஆவது இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கம் இதுவென்பதுடன், இலங்கையின் முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் பதக்கமொன்றை பெற்றுக் கொண்ட முதல் வீராங்கனையாகவும் பாரமி வசந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

சிலாபம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி கற்றுவருகின்றார்.

 பாரமி வசந்தி, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடைதாண்டல் போட்டியை  6 நிமிடங்கள் 37.9 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.