மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் இருந்து வெளியாகி வந்து மீண்டும் மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடியதாகச் சொல்லப்படும்  ஒருவரை நேற்று  கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.  தங்கொட்டுவ மற்றும் போலவத்தை பிரதேசங்களில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலைகளில் தொழிலாளியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் அந்த ஓட்டுத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களது இரண்டு மோட்டார் சைக்கிள்களைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றமை தொடர்பில்  செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே   குறித்த நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்மல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஹோட்டல் அறை ஒன்றை உடைத்து அங்கிருந்து பெறுமதியான பொருட்களுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளதோடு இன்னும் பல பிரதேசங்களிலிருந்தும் பல மோட்டார் சைக்கிள்களைத் திருடியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இவ்வாறு திருடிய மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலைக்கு விற்றுள்ளதோடு ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நபர் கலேவெல பிரதேச ஹோட்டல் ஒன்றில் தனது கள்ளக் காதலியுடன் பணியாற்றிக் கொண்டிருந்த போதே பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.