சம்மாந்துறை வளத்தாப்பிட்டி கரங்கா வட்டை பகுதியில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலைக்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக  சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் பெரும் பதட்டமான நிலை ஏற்பட்டிருந்தது.

இப்பிரச்சினைக்கு தீா்வு காணும் வகையில் கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்களுக்கும் இடையே  நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இதற்கு சுமூகமான தீா்வு எட்டப்பட்டுள்ளதாக அவா் மேலும் கூறினாா்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கரங்கா வட்டை  நெற் செய்கைக் காணிகளுக்குள் கடந்த சில நாட்களாக அத்து மீறி நுழைந்த சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நெற்செய்கை மேற்கொள்ளும் நோக்கத்துடன் உழவு வேலைகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அத்து மீறி தமது காணிகளுக்கள் நுழைந்தோருக்கு எதிராக, அம்பாறை பொலிஸ் நிலையத்தில் காணி உரிமையாளர்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்படி சர்ச்சைக்குத் தீர்வு காணும் பொருட்டு கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள் மற்றும் சிங்கள இனத்வர்களுக்கு இடையே  சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, குறித்த காணிகள் அரசுக்குத் சொந்தமானவை என நினைத்தே, அவற்றினுள் தாம் நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டதாக, சிங்கள மக்கள் கூறியதாகவும் தெரிவித்தாா்.

குறித்த பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணிகளில், சுமார் 65 ஏக்கர் காணிகளுக்குள், மேற்படி பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.