நீரிழிவு நோயாளிகளுக்கு அதிலும் குறிப்பாக பெண்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் உலகையே அச்சுறுத்தும் நோயாக சர்க்கரை நோயும், புற்றுநோயும் உருவெடுத்திருக்கிறது. ஏனைய நோய்களைக் காட்டிலும் இவ்விரண்டு நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோய் பாதிப்புள்ள ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும், அதிலும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப் பை வாய் புற்றுநோய் ஆகியவற்றின் பாதிப்பு 48 சதவீதம் இருக்கும் என்றும், ஏனைய புற்றுநோயின் பாதிப்பின் சதவீதம் 52 ஆக இருக்கும் என்றும் ஆய்வின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதே தருணத்தில் தொற்றா நோயான நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலருக்கு பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பும் ஏற்படும் என கண்டறியப்பட்டிருக்கிறது.

அதனால் பெண்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக உரிய பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொண்டால் அவர்கள் அதனை அலட்சியப்படுத்தாமல் உரிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். 

அத்துடன் தங்களின் வாழ்க்கை நடைமுறையை ஆரோக்கியமானதாகவும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வைத்தியர்கள் கூறும் அறிவுரையை உறுதியாக பின்பற்றி புற்றுநோய் பாதிப்பு ஏற்படாவண்ணம் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

டொக்டர் நல்லபெருமாள்

தொகுப்பு அனுஷா.