(எம்.நியூட்டன்)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என  தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, 17 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இவை கலந்துரையாடப்படுமா என்பது தொடர்பில் முடிவு ஏதும் இல்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமை்பபும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்,

அரசாங்கம் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொட்டுத் தொட்டு சில விடையங்களைச் செய்து வருகின்றது. 

ஆனால் ஒன்றையும் முறையாக செய்து முடிக்கவில்லை ஆகையால் காலக்கெடு ஒன்றினை விதித்து வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகச் செயற்படவேண்டும் என்ற கருத்து எங்கள் மத்தியில் பலரிடம் இருக்கிறது. 

ஆனால் என்னென்ன விடயங்கள்  சம்பந்தமாக நிபந்தனை வைக்கவேண்டும் எந்தக் காலக்கெடு கொடுக்கவேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சர்கள் தொடர்பான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவசரமாக சந்திக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை  முன்வைத்தபோது 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான கூட்டம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக கலந்துரையாடலாம் எனத் தெரிவித்திருந்தார். 

ஆனால் அன்றைக்கே ஒரு தீர்மானம் எடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது என மேலும் தெரிவித்தார்.