(எம். மனோசித்ரா)

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதாக கம்பனிகள் தெரிவித்த நிலையில், அதனை நாம் நிராகரித்துவிட்டு பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிவிட்டோமென பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமாக் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பள உயர்வில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இருப்பினும் தொழிற்சங்கங்கள் அதில் திருப்தியடையவில்லை. எமது இலக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க சக்தியுடன் தொழிற்சங்க சக்தியையும் மக்கள் சக்தியையும் இணைத்து எமது அடுத்தகட்ட நடவடிக்கையை இன்றிலிருந்து முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இதேவேளை, 3 தொழிற்சங்கங்களும் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்திற்கு கம்பனிகள் வரும் வரைக்கும் குறித்த கூட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டோமென உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டுஒப்பந்தத்தின் மூன்றாம் கட்டப்பேச்சுவார்த்தை இன்று இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது.  

இதனையடுத்து சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் முடிவு தொடர்பில் பிரதமருடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன். பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து நாம் சிறிது நேரத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டுக்கமிட்டி சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

குறித்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டு கமிட்டி சங்கம் உறுப்பினர்கள்  முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி மற்றும் கறுப்புநிற ஆடைஅணிந்து கூட்டு ஒப்பந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்ததையில் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தை 15 வீதத்தத்தால் அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.