“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் பேரம்பேசும் சக்தியால் அழுத்தம் கொடுக்க வேண்டும்”

Published By: Digital Desk 4

15 Oct, 2018 | 04:42 PM
image

நாடளாவிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலைக்கு அரசியல் தீர்மானமொன்றினை அரசாங்கம் மேற்கொள்வதே ஒரேவழியாகவுள்ளது எனவும் அதற்குரிய அழுத்தத்தினை தமிழ்ப் பிரதிநிதிகள் பேரம்பேசும் சக்தியைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான கே.வி.தவராஜா மற்றும் கே.எஸ்.இரத்தினவேல் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

அநுராதபுரம், மகசீன், போகம்பர ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் 65 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்திசாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்து கடந்த சனிக்கிழமையுடன் நிறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நீடித்து வரும் தமிழ் அரசியல்  கைதிகளின் விடுதலை தொடர்பான விடயம் குறித்து அவர்களின் வழக்குகளில் நீண்டகாலமாக பரீட்சயம் மிக்க சிரேஷ்ட சட்டத்தரணிகளான கே.எஸ்.இரத்தினவேல் மற்றும் கே.வி.தவராசா ஆகியோரிடம் வினவினோம்....

சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் கூறும் போது,

அரசியல் கைதிகள் என்ற விடயம் என்பது இந்த நாட்டிற்கு புதிய விடயமொன்று அல்ல.

அரசியல் ரீதியான உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்து தண்டனை வழங்கியது வரலாற்றுக்காலம் முதல் நடைபெற்று வருகின்றது. 

1971, 1980 களில் ஜே.வி.பி.கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக ஏற்கப்பட்டனர். சிலருக்கு எதிராக வழக்குகள் நடத்தப்பட்டாலும் அதிகளவானவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டும் பொதுமன்னிப்பளிக்கப்பட்டும் விரைவாக விடுதலை செய்யப்பட்டனர். 

தென்னிலங்கையில் நடைபெற்ற கிளர்ச்சிகளின் போது கைதுசெய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் வைக்கப்படவில்லை.

அரசியல் கைதிகள் பெரும்பான்மை இனத்தவர்களாக இருக்கும் போது நிலைமைகள் இவ்வாறு இருக்கையில், தமிழ் மக்களைச்சார்ந்தவர்கள் அரசியல்கைதிகளாக இருக்கும் போது பலத்த அநீதிகள், அக்கிரமங்கள் அவர்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. 

தற்போது சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் எவரும் தனிப்பட்ட காரணங்களுக்காக சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. மாறாக அரசியல் உரிமைகளை பெறுவதற்கான இயக்கத்தினை சார்ந்தே செயற்பட்டுள்ளார்கள்.

ஆகவே இவர்களையும் ஏனைய குற்றங்களை இழைத்தவர்களுக்கு ஒப்பாக குற்றவாளிகள் என்று கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படைக்காரணங்களும் இல்லை. 

ஆனால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் தமது அரசியல் சுயநலன்களுக்காக இவர்களை பயங்கரவாதிகள் என்றே கூறிவருகின்றார்கள். 

இதனைவிட தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிகாரத்தில் உள்ள ஒருசிலரும் அத்தகைய வார்த்தைபிரயோகங்களை பயன்படுத்திய சந்தர்ப்பங்களும் உள்ளன.

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்த் தலைமைகள் மிகப்பாரிய தவறுகளை இழைத்துள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தினை சட்ட நடவடிக்கைகள் மூலம் ஏதாவது செய்து விட முடியும் என்று தமிழ் அரசியல்வாதிகள் கருகின்றார்கள். 

உண்மையில் அது தவறான நோக்காகும். இந்த விடயத்திற்கு அரசியல் ரீதியான நடவடிக்கையே பொருத்தமானதாகும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அதிகளவான வாக்குகளை அளித்து அபரிமிதமான வெற்றியுடன் தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்திருக்கின்றார்கள்.

அவ்வாறான நிலையில் அந்தமக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக அணுகுவதே பொருத்தமானதாக இருக்கும். அதனைவிடுத்து நீதி அமைச்சர், சட்டமா அதிபர் போன்றவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம், வழக்குகளை துரிதப்படுத்துமாறு கோரவுள்ளோம் என்றெல்லாம் கருத்துரைப்பதே தவறானதாகும்.

எம்மைப்பொறுத்தவரையில் பொதுமன்னிப்பு, புனர்வாழ்வளிப்பு வழங்குமாறு கூட நாம் கோரவில்லை. தவறிழைத்து விட்டவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரமுடியும். ஆகவே தான் நாம் “அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையற்றவகையில் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்று கோருகின்றோம். சட்டமா அதிபர் சுயாதீனமாக செயற்படும் ஒருவர் அல்லர். அவர் அரசாங்க சட்டங்களுக்கு கட்டுப்பட்டவர். 

அவரே வழக்குகளை தாக்கல் செய்கின்றார். அவரிடத்தில் இந்த விடயங்களை பேசுவது பயனற்றதொன்றாகும்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு இந்த விடயத்தில் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரங்கள் உள்ளன. ஆகவே அவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது பேரம்பேசும் சக்தியை பயன்படுத்தி அரசியல் ரீதியாக தீர்மானங்கள் எடுத்திருக்க வேண்டும். 

ஆனால் அந்த சந்தர்ப்பங்களை கைநழுவ விட்டுவிட்டார்கள். தற்போது தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் தகவல் பரிமாற்றுகிறார்கள். ஆக, தபால்காரன் ஒருவரின் பணியையே செய்கின்றார்கள். அரசாங்கத்திடம் பேரம்பேசுகின்ற திராணியற்றவர்களாக மாறிவிட்டார்கள்.

சட்டரீதியான சாவால்கள் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை பொறுத்தவரையில் ஒருவருக்கு எதிராக ஒருகுற்றஒப்புதல் வாக்குமூலத்தினை பயன்படுத்தி வெவ்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வற்கு பதிலாக இவ்வாறு வழக்குகளை தாக்கல் செய்வதானது கைதிக்கு மிகப்பெரும் நெருக்கடியை அளிப்பதோடு அதனை கையாளுகின்ற சட்டத்தரணிகளே குழப்பமடைந்து விடுகின்ற நிலைமைகள் கூட ஏற்படுகின்றன.

இதனைவிட ஒரேவழக்கில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை உள்வாங்குகின்றபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வெவ்வேறாக காணப்படும். இதனால் வழக்குகளின் ஆரம்பகட்டம் நிறைவடைய பல வருடங்கள் கடந்து விடும். அதன்பின்னர் தான் பிரதான வழக்கு ஆரம்பமாகும். இதனால் கைதிகளாக உள்ளவர்களுக்கு விரக்தியான மனநிலை தோன்றுகின்றது. இத்தகைய நிலைமைகள் தோன்றுவதற்கு சட்டமா அதிபர் தரப்பின் செயற்பாடுகள் பிரதான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றன.

அநுராதபுரம் போன்ற பெரும்பான்மைத் தரப்புகள் மட்டுமே உள்ள நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றபோது தமிழ் சட்டத்தரணிகள் அந்த வழக்குகளில் பங்கேற்க முடியாதவொரு சூழல் இருக்கின்றது. ஆகவே இங்கு ஆஜராகின்ற பெரும்பான்மை தரப்பு சட்டத்தரணிகள் தமிழ் அரசியல் கைதிகளை நிரபராதிகளாக்க வேண்டும் என்ற மனநிலையில் வாதாடுவது குறைவு. 

தண்டனைக்காலத்தினை குறைத்து விரைவில் வழக்கினை நிறைவுக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்றே சிந்திக்கின்றார்கள். இதுவும் துரதிஷ்டவசமான விடயமாகும். இதனைவிடவும் வழக்குகளுக்காக சட்டத்தரணிகளை அமர்த்துதல், கட்டணங்களை செலுத்துதல், வழக்கு விசாரணைகளின்போது பங்கேற்றல் போன்றவற்றுக்கே முகங்கொடுக்க முடியாத நிலைமையில் சிறையில் உள்ளவர்களின் உறவினர்கள் காணப்படுகின்றார்கள். உதாரணமாக கூறுவதாயின், அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைப் படுகொலை செய்வதற்கான

குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பின்னர்  யாழ்.மேல்நீதிமன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

அதனையடுத்து சொற்பநாட்களில் அவர்கள் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கச் செய்யப்பட்டது. 

இச்சமயத்தில் குறித்த வழக்கு விசாரணையை யாழ்.மாவட்ட மேல்நீதிமன்றுக்கு மாற்றுமாறும், தமது உறவுகளுக்கு கொழும்புக்கு வந்து செல்லவே முடியாது என்றும் கூறி கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது அது நிராகரிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி, சட்டமா அதிபருக்கு காணப்படும் அதிகாரத்தின் பிரகாரம் வழக்கை மாற்ற இடமளிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டது. இந்த வழக்கின் ஆரம்பகட்டத்திலேயே நீதிமன்ற சூழல்குறித்த நபர்களுக்கு எதிராக உள்ளது. 

இவ்வாறான நிலையில் நியாயமான விசாரணை எப்படி முன்னெடுக்கப்படும் என்ற சிந்தனை அவர்களுள் ஏற்படுகின்றது. இத்தயை நிலைமைகளை சட்ட ரீதியாக கூட கையாள முடியாமலுள்ளது.

தற்போதைய நிலையில் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சட்டமா அதிபர் மீளப்பெற்றுக்கொள்வது குறித்தும் உத்தரவிடும் அரசியல் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

ஆகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடிப்படைய பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கின்ற அரசியல் கைதிகளின் விடயத்திற்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற சரியான நிபந்தனைகளை முன்வைத்து அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றபோது தான் இந்த விடயம் ஆரோக்கியமாக நகர்த்தப்படும். அதனை முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா கூறுகையில்,

1979 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் பாராளுமன்றில் ஒரேநாளில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடக்கம் இச்சட்டத்தின் கீழான கைதுகள் தடுத்து வைத்தல் வழக்குத் தாக்கல் செய்தல் என்பன தற்போது வரையில் அது தொடர்கதையாகவே இருக்கின்றன. சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொள்வதும் பின்னர் வாக்குறுதி அளிக்கப்படுவதும் தொடர்ந்து அவை நடைமுறையற்ற கிடப்பில் போடுவதும் தற்போது வரையில் தொடர்ந்த வண்ணமுள்ளன.

2015ஆம் ஆண்டு தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதற்கு அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளே பிரதான காரணமாகின்றது. ஆனால் தற்போதும் பழையகுருடி கதவை திறடி கதையாகவே இவ்விடயம் உள்ளது.

சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பிலான குற்றங்கள் புரிந்தவர்களை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பீடு செய்ய முடியாது. அத்தகைய குற்றங்கள் புரிந்தவர்களை காப்பாற்றுவதற்கான பகடைக்காய்களாகவும் தமிழ் அரசியல் கைதிகளை பயன்படுத்த முடியாது. காரணம், இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிவிசாரணைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் என்பதாலேயே ஜெனீவாவில் 30.1, 34.1பிரேரணைகளுக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது.

ஆகவே, அதனையும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தினையும் ஒன்றுபடுத்தி பார்க்க முடியாது.

சிறைகளில் உள்ளவர்கள் தமது தனிப்பட்ட நலன்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் அல்லர். அவ்வாறிருக்கையில் அரசியல் கைதிகளே நாட்டில் இல்லை என்று பொறுப்புவாய்ந்த முன்னாள் இந்நாள் நீதி அமைச்சர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளமை கவலையளிப்பதாக உள்ளது. சிறைகளில் நீண்டகாலமாக வாடும் தற்போதுள்ள 109தமிழ் அரசியல் கைதிகள் மூன்று வகைக்குள் உட்படுத்தப்படுகின்றனர்.

முதலாவதாக வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். இவ்வாறானவர்கள் 55பேர் காணப்படுகின்றார்கள். இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியால் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்ககுற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தின் 331ஆவது பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு தண்டனை தீர்ப்புக்களை நிறுத்தி வைப்பதற்கு அல்லது தளத்துவதற்கான அதிகாரங்கள் உள்ளதுடன் மேலும் அரசியலமைப்பின் உறுப்புரை 34(1)இன் கீழ் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிபந்தனையுடனும் மன்னிப்பு வழங்கலாம், ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்; அதனடிப்படையில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்கின்றபோது 55பேரின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடும்.

முன்னதாக ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைவாக 1971இல் 1989இல் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியாளர்கள் விடயத்திலும், 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டபோதும், 2002ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிகழ்வுகள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்தவுடன் 12ஆயிரம் பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் உள்ளார்கள். இவை அனைத்துமே அரசியல் தீர்மானங்களின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதை கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இரண்டாவதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 43பேரின் விடயத்தினை எடுத்துக்கொண்டால், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வளிப்பதாயின் சட்டமா அதிபரே அவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை மீறப்பெறவேண்டியுள்ளது. 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தின் 194ஆவது பிரிவில் அதற்கான அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த அதிகாரத்தை பல வழக்குகளில் சட்டமா அதிபர் கையாண்டுள்ளார் அண்மையில் பாகிஸ்தான் தூதுவரைக் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாக மூன்றாவது எதிரியின் வழக்கினை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றதையடுத்து.எதிரி விடுதலை செய்யப்பட்டார் மூன்றாவதாக கைது செய்யப்பட்டு இதுவரையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதுள்ளவர்கள் காணப்படுகின்றனர். 

சட்டமா அதிபரே வழக்கு தாக்கல் செய்யவேண்டியவராக உள்ள நிலையில் அவர் வழக்குகளை தாக்கல் செய்யாத பட்சத்தில் அவர்கள் விடுதலைசெய்யப்படுவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. இவ்வாறு சட்டரீதியாகவே அதிகாரங்கள் காணப்படுகின்ற நிலையில் இந்த விடயத்தினை எவ்வாறு அணுக முடியும் என்பதே பிரதானமாக கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் குற்றமிழைக்கப்பட்டவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. அதிகபட்சமாக 20ஆண்டுகளே தண்டனை வழங்க முடியும். அப்படி வழங்கப்படும் பட்சத்தில் ஒரு நபர் 13,14 ஆண்டுகளில் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலையாக முடியும். அவ்வாறு பார்த்தாலும் தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைக் காலத்திற்கும் அதிகமாக சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.

தற்போது 65 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். படிப்படியாக விடுவிக்கின்றோம், வழக்குகளை துரிதப்படுத்துகின்றோம் என்ற உறுதிமொழிகளை அவர்களுக்கு வழங்குவது பொருத்தமற்றதாகும். மேலும் பாரதூரமான குற்றங்கள் இழைத்தவர்கள் தொடர்பில் எதுவும் செய்யமுடியாது என்று சட்டமா அதிபரும் கூறிக்கொண்டிருக்கின்றார். ஆனால் பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் எதிரிகளாக பெயர் குறிப்பிப்பட்டுள்ளவர்கள் பிரதான குற்றவாளிகளும் அல்லர். உதவி ஒத்தாசை புரிந்தவர்களாகவே உள்ளார்கள்.

முதன்மையான எதிரிகள் இல்லாத நிலையில் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை சட்டத்தின் 167ஆவது பிரிவின் சீழ் சட்டமா அதிபர் குற்றச்சாட்டுபத்திரத்தை மாற்றியமைக்க அதிகாரமுள்ளது அழுத்தம் தேவை குற்றச்சாட்டு பத்திரத்தை மாற்றியமைக்குமிடத்து எதிரி குற்றத்தை ஒத்துக் கொண்டால் சிறையில் இருந்த காலத்தைகழித்து சிறியகால தண்டனை வழங்க முடியும் ஒத்திவைக்கப்பட்ட தண்டனை வழங்க முடியும் என்பதுடன் புனர்வாழ்விற்கு அனுப்பி விடுதலை செய்யவும் முடியும் ஆனால் இவர்களுக்கு ஆகக்குறைந்தது பிணை வழங்காது இருப்பதானது அரசியல்பழிவாங்கலாகும். சட்டரீதியாகவே அதிகாரங்கள் காணப்படுகின்ற நிலையில், ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர், சட்டமா அதிபர் ஆகிய நால்வரும் ஒன்றிணைந்து அரசியல் ரீதியான தீர்மானத்தினையே எடுக்கவேண்டியது தற்போதைய தேவைப்பாடாகவுள்ளது. இவ்வாறான தீர்மானம் எடுப்பது சட்டத்தினை துஷ்பிரயோகம் செய்வதாக யாரும் கூறிவிடமும் முடியாது. ஆகவே தீர்மானம் எடுப்பது அவர்களின் மனநிலையிலும் தமிழ் தரப்பின் அழுத்தத்திலும் தான் தங்கியுள்ளது என்றார்.

- ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04