மரக்கறிகள் அடங்கிய பையாக வெளியில் தெரியும் வகையில் காட்டிக் கொண்டு உள்ளே கசிப்பு போத்தல்களை எடுத்துச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை நேற்று எட்டியாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.  

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டவராவார்.

எட்டியாவல வீதியில் கசிப்பு கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவ்வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரே இவ்வாறு இப்பெண்ணை கசிப்புடன் கைது செய்துள்ளனர். 

அவ்வீதியில் பெரியதொரு பையொன்றை தூக்கிக் கொண்டு வந்த பெண் வீதியில் பொலிஸார் நிற்பதை அவதானித்து வந்த வழியே திரும்பிச் செல்ல முயன்றதால் சந்தேகம் கொண்ட பொலிஸார், அப்பெண்ணை நிறுத்தி சோதனை செய்த போது தான் மரக்கறி கடைக்குச் சென்று மரக்கறிகள் வாங்கிக் கொண்டு வருவதாகவும்,  வாங்க வேண்டிய பொருள் ஒன்றை வாங்க மறந்ததால் கடைக்குத் திரும்பிச் செல்லச் சென்றதாகவும் அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 எனினும் பொலிஸார் அப்பெண்ணிடமிருந்த பையினை மேல் நிரப்பப்பட்டிருந்த மரக்கறிகளை அகற்றிப் பார்த்த போது பையின் அடியில் இருந்த 15 போத்தல் கசிப்பை மீட்டுள்ளதோடு அப்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.