தனது தங்கையின் காதல் தொடர்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த அண்ணன் ஒருவர் தங்கையின் காதலனான பாடசாலை மாணவன் ஒருவனின் கையை கத்தியால் வெட்டி காயமேற்படுத்திய சம்பவம் கல்கமுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. 

வெட்டுக்காயத்திற்குள்ளான கல்கமுவ நான்னேறிய பிரதேச பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த மாணவனும், அதே பாடசாலையில் பயிலும் மாணவியும் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளனர்.  இந்த காதல் தொடர்பின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த மாணவியின் சகோதரன் பல சந்தர்ப்பங்களில் தனது தங்கையையும், குறித்த மாணவனையும் எச்சரித்து இத்தொடா்பைக் கைவிடுமாறு கூறிவந்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இருவரும் தமது காதல் தொடர்பைப் பேணி வந்ததால் கோபமடைந்த சகோதரன் குறித்த மாணவனின் கையை வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

குறித்த மாணவியின் சகோதரனும் அவரது நண்பர்களும் இணைந்தே  இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு மாணவனின் கையில் மூன்று இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாணவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இச் சம்பவம் தொடர்பில் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களையும் கைது செய்வதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.