வென்னப்புவ நகரில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு நான்கு வயது மகளுடன்  நேற்று  மாலை வந்துள்ள பெண் ஒருவர் ஆடைகளை வாங்கும் போர்வையில் அங்கிருந்து சுமார் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ கொளுஞ்சாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைதுசெய்யப்பட்ட பெண் தனது நான்கு வயது மகளுடன் ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று ஆடை வாங்குவது போல ஆடைகளைத் தெரிவு செய்து கொண்டிருந்த போது ஆறு பாவாடைகளை அப்பெண் அணிந்திருப்பதை அவதானித்த விற்பனை நிலைய பணியாளர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அங்கு வந்த பொலிஸார் அப்பெண்ணைக் கைது செய்துள்ளனர். 

பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் அங்கு வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவள் அணிந்திருந்த ஆறு பாவாடைகளை மீட்டுள்ளனர்.  இப்பெண் இவ்வாறு இதற்கு முன்னரும் இந்த ஆடை விற்பனை நிலையத்திற்கு வந்து ஆடைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட பெண்ணை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.