சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை  மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணியொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ். டினேஸ் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மாவட்ட சமூக சேவைகள் தலைமை அதிகாரி எம். அலியார் மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிராந்தியத் தலைவர் எஸ். சடாச்சரராஜா ஆகியோருட்பட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் வெள்ளைப் பிரம்பு தின விழிப்புணர்வுப் பேரணியில்   மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் ஆசிரியர்கள், நிருவாகிகள், மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, இந்துக் கல்லூரி, சிவானந்தா தேசியப் பாடசாலை, விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளின் மாணவ மாணவிகள், ஆசிரியர்கள்0 பங்கு கொண்டனர்.

இதன்போது பேரணியில் கலந்து கொண்டோர் வெள்ளைப்பிரம்பு தினத்தைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் மற்றும் தங்களது  உரிமைகள் தொடர்பான  வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும் நிகழ்வில் கலந்துகொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.

1961 முதல் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான உலக வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.