நாட்டில் சுற்றாடல் சவால்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தற்போது கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், இந்த சவால்களை வெற்றி கொள்ள பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.நூற்றாண்டு நிறைவை கொண்டாடும் பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதி இதன்போது மாணவர்களிடம் முன்வைத்தார். அனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் தமது பிறந்த நாளன்று மரக்கன்றொன்றினை நாட்டுவதற்கு அவர்களை பயிற்றுவிக்கும் வகையிலான செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி ,பாடசாலை அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.சுற்றாடலே எதிர்கால உலகின் நிலவுகையை தீர்மானிக்கும் காரணியாகும் என தெரிவித்த ஜனாதிபதி, சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை சகலரும் துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த X- Ban கண்காட்சியையும் ஜனாதிபதி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த X- Ban கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி,மாணவர்களின் திறமைகளை பாராட்டினார்.

கிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனால் உருவாக்கப்பட்டிருந்த ரொக்கெட் இதன்போது ஜனாதிபதி  அவர்களின் விசேட கவனத்திற்கு உள்ளாகியதுடன், அந்த ரொக்கட்டினை வானில் பறக்க விடுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அதற்கான செலவினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை, அப்பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பாடசாலை வளாகத்திலுள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் “விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்” இதன்போது ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் இரான் சம்பிக்க டி சில்வாவினால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர்கள் லசந்த அழகியவன்ன, அஜித் மான்னப்பெரும, கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க, மாவட்டசெயலாளர் சுனில் ஜயலத், ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன உள்ளிட்டோரும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.