அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருக்கும் முகாம்களில் பாரிய நோய் அபாயம் உள்ளதால் அங்குள்ளவர்களை உடனடியாக வெளியேற்றவேண்டுமென ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுஎன்எச்சீஆர் அமைப்பின் அவுஸ்திரேலியாவிற்கான பேச்சாளர் கதெரின் ஸ்டபெர்பீல்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் சுகாதாரசேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

நவ்று முகாமில் கடந்த மாதம் பதின்ம வயது யுவதியொருவர் தீ மூட்டி தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்துள்ள ஐநா அமைப்பின் பேச்சாளர் அவரை முகாமிலிருந்து வெளியேற்றவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அந்த யுவதி தொடர்ந்தும் முகாமிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவே தடுப்பு முகாம் திட்டத்தினை உருவாக்கி வடிவமைத்து அதனை நடைமுறைப்படுத்தி வருவதால் அதற்கான பொறுப்பை அவுஸ்திரேலியாவே ஏற்கவேண்டும் எனவும் யுஎன்எச்சீஆரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முகாமில் உள்ள சிலரை பொறுப்பேற்க தயார் என நியுசிலாந்து தெரிவித்துள்ளதை அவுஸ்திரேலியா பயன்படுத்தவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் செப்டம்பர் மாதம் பலரை மருத்துவ சிகிச்சைகளிற்காக அவுஸ்திரேலியாவிற்கு கொண்டுசெல்லவேண்டிய நிலையேற்பட்டது இது முகாம்களில் நிலைமை மோசமடைவதை புலப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.