பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று  கையொப்பமிடும் தொழிற்சங்கங்களின்  கோரிக்கையை மலையக மக்கள் முன்னணி வரவேற்கின்றது அதற்கு முழுமையான ஒத்தழைப்பை வழங்க நாங்கள் தயார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பலாங்கொடை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்,

இந் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மலையக மக்களின் முக்கிய பிரச்சினையாக இருப்பது அவர்களுடைய சம்பள பிரச்சினையாகும்.இந்த சம்பள கூட்டு ஒப்பந்தம் ஒவ்வொரு வருடமும் கையொப்பமிடுகின்ற பொழுது அதற்காக பல போராட்டங்களை செய்து பல சுற்று பேச்சுவார்த்தை நடாத்தி அதன் பின்பு ஒரு சிறு தொகை அதிகரிக்கப்பட்டு சம்பளம் வழங்கப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தை போராட்டம் இதற்கான காலம் கூட்டு ஒப்பந்த காலத்தை மீறி செல்வதால் சம்பள உயர்வு வழங்கப்பட்ட பின்பு அந்த நிலுவை தொகையை பெற்றுக் கொள்வதற்கு ஒரு போராட்டம் மீண்டும் செய்ய வேண்டும். இந்த நடைமுறையில் நிச்சயமாக மாற்றம் வேண்டும். உலக நாடுகள் வளர்ச்சி கண்டு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்ற இந்த நிலைமையில் ஏன் நாங்கள் இப்படி போராட்டம் செய்ய வேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அமைப்பாளரும் முன்னாள் மாகாண அமைச்சருமான பானுமுனுப்பிரிய சப்ரகமுவ மாகாண  பிரதான செயலாளர் ஹேரத் பி.குலரத்ண சப்ரகமுவ கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரும் பொது மக்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.