(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு தேசத்தின் உள்நாட்டு பிரச்சினைகள், இனப் பிரச்சினைகள், மத பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள்  என அனைத்திற்கும் மகாத்மா காந்தியின் கொள்கையே தீர்வாகும். பல மத இனங்களை கொண்ட நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை உருவாக்க காந்தியே சிறந்த எடுத்துகாட்டாகும்." என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150 ஆவது ஜனனதினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில்  ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

"மகாத்மா காந்தி ஒரு அரசியல் வாதி அல்ல, சுதந்திர போராளி. அன்றைய சுதந்திர போராட்டத்தில் ஏனைய  தலைவர்களுடன் இணைந்து அவர் வழங்கிய தலைமைத்துவம் அகிம்சையாக வன்முறை இன்றி, மோதல் தன்மை குறைந்த மக்கள் போராட்டமாக அமைந்தது.

அது  இன்றைய போராட்டங்களை விட முற்றிலும் வேறுபட்டது. அவர் இந்திய மக்களுக்கு மட்டும்  அல்ல, உலகின் சகல நாடுகளுக்கும் உரித்தான நபர். அதேபோல்  எமது நாட்டில் காலெடுத்து வைத்த மிகச்சிறந்த  மனிதர் அவராவார்.

தேசிய போராட்டத்தில் இந்தியர்களை இணைத்துக்கொள்ள அவரிடம் இருந்த தலைமைத்துவம், ஒழுக்கம், திறமை, கல்வி, உண்மையாக மக்களை நேசிக்கும் தன்மைதான் அவரின்  வெற்றியாகும்." என தெரிவித்தார்.