கண்டி மாவட்டத்திலுள்ள சமூக நீர் வழங்கல் அமைப்புகளைப் பலப்படுத்தி குறைந்த செலவில் குறுகிய காலத்தில் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.கண்டி மாவட்டத்திலுள்ள சமூக நீர் வழங்கல் அமைப்புகளைப் பலப்படுத்துவதற்கான நிதி வழங்கல் மற்றும் மதஸ்தலங்களுக்கு குடிநீர் தாங்கிகளை பெற்றுக் கொடுக்கும் வைபவம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கட்டுகஸ்தொட்டை அலுவலகக் கேட்போர் கூடத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கண்டி மாவட்டத்திலுள்ள 300 க்கும் மேற்பட்ட சமூக நீர் வழங்கல் அமைப்புகளை புனரமைப்பதற்கான அறிக்கையொன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் கீழ் முன்வைக்கப்பட்டது அதன் பிரகாரம் குறைபாடுகளை இனம்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான திட்டத்தின் முதலாவது படிமுறையாக 10 சமூக நீர் வழங்கல் அமைப்புகளுக்கு சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் இவ்வைபவத்தின் போது வழங்கி வைக்கப்பட்டது. 

மேலும் குடிநீர் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்ள கஷ்டப் பிரதேசங்களில் காணப்படும் 15 மத வழிபாட்டுத் தலங்களுக்கு 1000 லீற்றர் கொள்ளளவுடைய நீர் தாங்கிகளும் இதன் போது கையளிக்கப்பட்டன. 

இவ் வைபவத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, 

கண்டி மாவட்டத்தின் சில கஷ்டப் பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினை, தீவிரமடைந்து காணப்படுவதால் நீர் பாவனையாளர் சங்கங்களினூடாக கிராமிய நீர் வழங்கல் திட்டங்களை வலுப்படுத்தி வருகிறோம். அவற்றின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காக நிதி உதவிகளை வழங்கும் திட்டமொன்றை முன்வைத்துள்ளதுடன் அதன் முதலாவது கட்டமாக இன்று இந்நிதி உதவியை வழங்கினோம்.

நாடு முழுவதிலும் உள்ள 6000 க்கும் அதிகமான சிறியளவிலான சமூக நீர் வழங்கல் திட்டங்கள் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தினால் கண்கானிக்கப்பட்டு வருவதுடன் இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் இத்திணைக்களத்திற்கு ரூபாய் 180 மில்லியன் நிதி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது அதனை அதிகரித்துத் தருமாறு நிதி அமைச்சிடமும் அமைச்சின் அதிகாரிகளிடமும் கூறியுள்ளோம்.

மேலும் நாடு பூராகவும் சுமார் 350 பாரிய குடிநீர் திட்டங்கள் செயற்பட்டு வந்த போதிலும், அவற்றின் மூலம் நாட்டின் சனத்தொகையில் 38 சதவீதத்தினருக்கு மட்டுமே குழாய் மூலமாக சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் காணப்படும் சுமார் 6000 சிறியளவிலான  சமூக நீர் வழங்கல் திட்டங்களின் மூலம் நாட்டின் மொத்த சனத்தொகையில் 12 சத வீதத்தினருக்கு குழாய் மூலமான குடிநீரை வழங்க முடிகின்றது. 

இந்த சமூக அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் திட்டங்களின் மூலம் பாரிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நான் நிதி அமைச்சரின் கவனத்திற் கொண்டு வந்திருப்பதுடன் பாரிய நீர் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதைப் போலவே சமூக நீர் வழங்கல் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கச் செய்யுமாறு நிதி அமைச்சரைக் கோரியுள்ளேன். 

கண்டி குஹாகொட பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்து பாததும்பரை, ஹாரிஸ்பத்துவ, யட்டிநுவர முதலான பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 4 இலட்சம் மக்கள் பயனடையும் வகையில் சுத்தமான குடிநீரை வழங்க முடியும். இந்தக் கருத்திட்டத்திற்காக 33 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருப்பதுடன் இதனை சீன வங்கியிடமிருந்து கடனாகப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கருத்திட்டம் பூர்த்தியடைந்ததும் கண்டிப் பிரதேசத்தின் கூடுதலான பகுதிகளின் நீர்ப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.