இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. 

இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவு அணித் தலைவர் ஜோசல் ஹொல்டர் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடி வந்த மேற்கிந்தியத் தீவு அணி 34.1 ஓவரில் 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வந்தது. அதன்படி பிரித்வெய்ட் 14 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சிலும், கிரன் பவுல் 22 ஓட்டத்துடன் அஸ்வினுடைய பந்து வீச்சிலும், ஷெய் ஓப் 36 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சிலும், சிம்ரான் ஹெட்மியர் 12 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சிலும் மற்றும் சுனில் அம்பிரஸ் 18 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனினும் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய ரோஸ்டன் சேஸ் மற்றும் டவ்வுரிஜ் நிதானமாக துடுப்பெடுத்தாடி 69 ஓட்டங்களை இருவரும் பெற்றுக் கொள்ள மேற்கிந்திய தீவு அணியின் ஓட்ட எண்ணிக்கை 182 ஆனது. எனினும் 59.3 ஆவது ஓவரில் டவ்வுரிஜ் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் ஹொல்டர் ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்தாட சரிவிலிருந்து மேற்கிந்திய அணி மீண்டெழுந்தது. 

இவர்கள் இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை பந்துகளை துல்லியமாக எதிர்கொண்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். எனினும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 286 ஆக இருந்தபோது மேற்கிந்திய தீவு அணி தனது 7 ஆவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது.

அதன்படி ஹொல்டர் 92 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 52 ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரின் வெளியேற்றத்தை அடுத்து தேவேந்திர பிஷோ களமிறங்கி ஆடி வர மேற்கிந்திய தீவு  அணி 95 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 295 ஓட்டங்களை பெற்றபோது முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் சரிவிப் பாதையிலிருந்து அணியை மீட்டெடுத்த ரோஸ்டன் சேஸ் 98 ஓட்டத்துடனும் தேவேந்திர பிஷோ 2 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அஷ்வின் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.