பணி முடிந்து தனது தங்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞரைத் தாக்கியதாகக் கூறப்படும் ஏழு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலவ்வத்தை தங்கொட்டு பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதுக்கும், 25 வயதுக்கும் இடைப்பட்ட 7 இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

நேற்று  இரவு 7 மணியளவில் தான் பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பணி முடிந்து தான் தங்கியிருக்கும் தங்குமிடத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த போது தங்கொட்டுவ நகரில் தனக்கு முன்னால் வந்த சிலர் தன்னிடம் தீப்பெட்டியைக் கேட்ட போது தான் தன்னிடம் தீப்பெட்டி இல்லை எனக் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது அவர்கள் தன்னைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். 

இவர்களால் தாக்குதலுக்கு உள்ளான நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த தங்கொட்டுவவில் தங்கியிருந்து  நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 22 வயதுடைய இளைஞர் தங்கொட்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

கைது செய்யப்பட்டவர்களை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மெற்கொண்டுள்ள தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.