முந்தல் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக தயார் நிலையிலிருந்த கோடா பெரல் ஒன்று 15 போத்தல் கசிப்பு மற்றும் செழிப்பாக வளர்ந்திருந்த  கஞ்சா செடியுடன் ஐவரை நேற்று கைதுசெய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்ததொடுவா பிரதேசத்தில் அன்றாடம் கசிப்பு உற்பத்தி இடம்பெறும் இடத்திலிருந்து கோடா பெரல் ஒன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவ்விடத்தில் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்கள் எதுவும் இல்லாதிருந்ததோடு, வேறு இடத்தில் மறைத்து வைத்திருக்கும் உபகரணங்களை இரவு நேரத்தில் கொண்டு வந்து கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

இதேநேரம் மதுரங்குளி வேலாசிய, செம்புக்குளி, தொடுவா ஆகிய பிரதேசங்களில் விற்பனைக்காகத் தயார் நிலையில் இருந்த 15 கசிப்பு போத்தல்களுடன் மூவரும், வீடொன்றில் சுமார் ஆறு அடி உயரத்திற்கு செழிப்பாக வளர்ந்திருந்த கஞ்சா செடியுடன் ஒரு சந்தேக நபருமே இவ்வாறு இந்நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்