நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களை விற்பனை செய்வதில் நாட்டில் முன்னணியில் திகழ்ந்துவருகின்ற சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி, இலங்கையில் ரக்பி விளையாட்டிற்கு ஆதரவளிப்பதில் முன்னின்று உழைக்கும் தனது பாரம்பரியத்தினைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் வகையில் இலங்கை பாடசாலைகள் ரக்பி மற்றும் உதைபந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிங்கர் பாடசாலைகள் ரக்பி சுற்றுப்போட்டி 2016 இற்கு வலுவூட்ட முன்வந்துள்ளது. 

இந்த பிரசித்தி பெற்ற சுற்றுப்போட்டிக்கு இம்முறை தொடர்ந்து 13 ஆவது ஆண்டாகவும் சிங்கர் ஸ்ரீ லங்கா அணுசரணையளிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

19 வயதிற்குட்பட்ட பாடசாலை ரக்பி சுற்றுப்போட்டியின் 2016 ஆம் ஆண்டு பருவகாலத்தில் 3 பிரிவுகளில் 69 பாடசாலைகள் தமக்கிடையில் போட்டியிடவுள்ளதுடன், மொத்தமாக 226 ஆட்டங்கள் அடங்கியுள்ளன. பிரிவு 1 இல் ஒவ்வொன்றும் 6 அணிகளைக் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 2 இல் 4 பிரிவுகளின் கீழ் மொத்தமாக 22 அணிகள் இடம்பெற்றுள்ளன. பிரிவு 3 இல் 2 பிரிவுகளின் கீழ் 11 அணிகள் அடங்கியுள்ளன. இந்த அணிகள் 3 பிரிவுகளின் மத்தியில் Cup, Plate, Bowl மற்றும் Shield வெற்றிக்கிண்ணங்களுக்காக போட்டியிடவுள்ளன. 

இலங்கையில் ரக்பி விளையாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து மட்டங்களிலும் அதற்கு ஆதரவளித்து வந்துள்ள பெருமைமிக்க வரலாற்றை சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் கொண்டுள்ளது. 

நிறுவனம் 26 ஆண்டுகளாக Bradby Shield போட்டிக்கு அணுசரணையளித்து வந்துள்ளதுடன், அண்மைய காலங்களில் நாட்டில் அதிசிறந்த ரக்பி அணியாகத் திகழ்ந்து வருகின்ற கண்டி விளையாட்டுக் கழகத்திற்கு தொடர்ந்து 13 ஆண்டுகளாக அனுசரணையளித்து வந்துள்ளது. 

மேலும் கடந்த ஆண்டில் முதன்முறையாக அணிக்கு எழுவர் கொண்ட சர்வதேச ரக்பி போட்டியை ஏற்பாடு செய்து, இலங்கை ரக்பி விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என இரு தரப்பிற்கும் சர்வதேச அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது. இதற்கு இணையாக நாட்டில் ரக்பி விளையாட்டை நீண்ட கால அடிப்படையில் அபிவிருத்தியுடன் நிலைபெறச் செய்து, வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் சிங்கர் ஸ்ரீ லங்கா முக்கிய பங்காற்றி வந்துள்ளது. நிட்டவல ரக்பி மைதானத்தில் புள்ளி பலகைகளை (ஸ்கோர்போட்) நிறுவியமை, ரோயல் கல்லூரி விளையாட்டு வளாகம் மற்றும் பள்ளேகல ரக்பி மைதானத்தில் ரக்பி கூடாரங்களை நிர்மாணித்தமை போன்ற மிகவும் தேவைப்பட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை சில குறிப்பிடத்தக்க பணிகளாகும்.    

இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய சிங்கர் ஸ்ரீ லங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகத் துறைப் பணிப்பாளரான திரு. மகேஷ் விஜேவர்த்தன,

“இலங்கை பாடசாலைகள் ரக்பி உதைபந்து சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகுந்த ஆர்வத்துடன் அனைவரது எதிர்பார்ப்புக்களையும் ஈர்த்துள்ள பாடசாலைகள் ரக்பி சுற்றுப்போட்டி 2016 உடன் இணைந்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை அடைந்துள்ளோம். எமது தேசத்தில் இளைஞர்,யுவதிகள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதை ஊக்குவித்து, அவர்களை ஆளுமைப்படுத்துவதில் சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அது தொடர்பில் முன்னின்று பணியாற்றி வருகின்றது. ஒழுக்கம், மரியாதை, தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமையாகச் செயற்படுதல் ஆகிய பண்புகளை வளர்க்க விளையாட்டுக்கள் உதவுகின்றன. நாட்டிலுள்ளஇளைஞர்,யுவதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமாக நாம் உண்மையில் இலங்கையின் எதிர்காலத்தின் மீது முதலீடு செய்கின்றோம்” என்று குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் தகைமை பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் நடாத்தப்படுகின்ற விசேட செயலமர்வுகள் மூலமாக அனைத்து போட்டி அதிகாரிகள், பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும். கடந்த காலங்களில் இத்தகைய செயலமர்வுகளில் பங்குபற்றி, பெறுமதிமிக்க விடயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை உள்நாட்டிலுள்ள எமது திறமைசாலிகளுக்கு நாம் வழங்கியுள்ளதுடன், வெளிநாடுகளில் அவர்கள் சர்வதேச பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவும் உதவியுள்ளோம்”.

இலங்கை பாடசாலைகள் ரக்பி உதைபந்து சங்கத்தின் தலைவரான ரஞ்சித் சந்திரசேகர அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில் ,

“நாட்டில் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு விளையாட்டுக்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்பதற்கு சிங்கர் எப்போதும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்நிறுவனம் எமக்கு வழங்கிவந்துள்ள ஆதரவிற்காக நாம் நன்றிக்கடன்பட்டுள்ளதுடன், இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான பிணைப்பை எதிர்வரும் காலங்களிலும், தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கையில் ரக்பி விளையாட்டிற்கு சிங்கர் வழங்கிவந்துள்ள ஆதரவின் காரணமாக இந்த விளையாட்டை கிராமப்புறங்களுக்கு எடுத்துச்சென்று அங்கும் ஊக்குவிக்க உதவியுள்ளதாக குறிப்பிட்டார். 

“பல ஆண்டுகளுக்கு முன்னர் ரக்பி விளையாட்டு என்பது நகரப்புறங்களிலுள்ள முன்னணி பாடசாலைகளால் மட்டுமே அறியப்பட்ட ஒரு விளையாட்டாக காணப்பட்ட நிலையில், அந்த நிலையை மாற்றியமைத்து, இதனை கிராமப்புறப் பாடசாலைகளுக்கும் எடுத்துச் சென்று, நாட்டில் மிகச் சிறந்த ரக்பி வீரர்கள் சிலரை வெளிக்கொண்டுவர சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் எமக்கு உதவியுள்ளது” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.  

சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனம் எமது நாட்டில் விளையாட்டுத் துறை மீது கொண்டுள்ள ஈடுபாடு ரக்பிக்கும் அப்பாற்பட்டது. 

கடந்த 20 ஆண்டுகளில் ஏனைய பாடசாலை, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தேசிய மட்ட விளையாட்டு நிகழ்வுகள் பலவற்றிற்கு நிறுவனம் தனது ஆதரவை வழங்கி, அதன் மூலமாக இலங்கை மக்கள் அனைவருக்கும் தமது விருப்பத்திற்குரிய விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்துக் கொடுத்துள்ளது.