வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட இரு பகுதிகளில் சுற்றுலாத்தளம் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.நடனேந்திரன் தெரிவித்தார்.

அராலி கிழக்குப் ஜே/163பகுதியில் அமைந்துள்ள அராலிப் பாலைத்தை அண்மித்த பகுதிகளில் சுமார் 6 ஏக்கர் காணியை மையப்படுத்தி அப்பகுதியில் ஓய்வு மண்டபம்,  நடை பாதை, படகு சேவை, சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் போன்றவற்றை அமைப்பதற்கு ஏற்ப சுற்றுலா மையத்தை உருவாக்குவதற்கு வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு குறித்த இடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை குறித்த இடங்கள் பிரதேச சபை, பிரதேச செயலக அதிகாரிகளினால் பார்வையிடப்பட்டுள்ளது.

இதேவேளை சுழிபுரம் மேற்கு புளியந்துறைப் பகுதியில் சுமார் பத்து ஏக்கர் காணியும் சுற்றாடல் துறை மையம்  அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியிலும் ஓய்வு மண்டபம், நடை பாதை, படகு சேவை, சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் போன்றவற்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கருத்திட்ட முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதேச செயலகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றதும் கருத்திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்துதற்கு ஏற்ப நிதி ஒதுக்கீடுகளை கோரவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார்.