கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தையுடன் கலந்துரையாடிய அவர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் தாயாரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை செவிமடுத்திருந்தார்.

இந் நிலையில் விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர்  மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் இம்மாதம் 22 ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் தாயாரினால் தனது மகளின் இறப்பில் மகளின் கணவரின் மேல் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துடன் சட்டமா அதிபரின் மூலமாக விசாரணையினை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடிதம் ஒன்றினையும் கையளித்திருந்தார்.