(எஸ்.ஜே.பிரசாத்)

சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், வீர வீராங்கனைகளின் அணிவகுப்புகள் மற்றும் வான வேடிக்கைகள் என்பவற்றுடன் 44 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று பொலன்னறுவையில் ஆரம்பமானது.

ஒன்பது மாகாணங்களிலிருந்து 1500 இற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளும் இப்போட்டி விழாவானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறும்.

பொதுவாக தேசிய விளையாட்டு விழாவில் அரச தலைவர்கள் அதிதிகளாக கலந்துகொள்வதுடன் நாட்டின் ஜனாபதிபதியோ அல்லது பிரதமரோ விசேட அதிதியாகக் கலந்துகொண்டு போட்டி விழாவை ஆரம்பித்து வைப்பார்கள். எனினும் இம்முறை விசேட அதிதியாக ஒலிம்பிக்கில் இலங்கைக்கு பதக்கம் ஒன்றை பெற்றுக் கொடுத்த சுசந்திகா ஜயசிங்க கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இத் தேசிய விளையாட்டு விழாவானது இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் போட்டிகள் நாளைமுதல் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.