(நா.தனுஜா)

"இந்து சமுத்திரத்தில் 2025ஆம் ஆண்டளவில் வர்த்தக மத்திய நிலையமாக எமது நாட்டைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்." என இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்தும் வகையிலும், பிராந்தியப் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையிலும் 'இந்து சமுத்திரம் - எமது எதிர்காலத்தை வரையறுத்தல்" எனும் தொனிப்பொருளில்  இன்று  அலரிமாளிகையில் ஆரம்பமான மாநாட்டில் விசேட உரையாற்றுகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"இந்து சமுத்திரப் பிராந்தியம் பல வருடகாலம் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ள அதேவேளை தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியம் பூகோள வர்த்தக ரீதியில் மிக முக்கியத்துவமுடைய மையமாக மாறிவருகின்றது.

இப்பிராந்தியத்தில் காணப்படுகின்ற வாய்ப்புக்களைப் போன்றே சவால்களை இனங்கண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்வதன் மூலம் முழுமையான அனுகூலத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையில் பொதுவான கலந்துரையாடல் மற்றும் அதனூடான ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் இடம்பெற வேண்டும்.

போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கடல்வள மாசுபாடு, வளங்களின் துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இம்மாநாட்டின் மூலமாக இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையில் கருத்துப் பரிமாற்றத்தினை ஏற்படுத்த முடிவதுடன், அதன்மூலம் தொடர்ச்சியான அரசியல்சார் புரிந்துணர்வினை அடைந்து கொள்ள எதிர்பார்த்துள்ளோம்." எனத் தெரவித்தார்.