எமது கிரிக்கெட் விளையாட்டு தற்போது அடைந்துள்ள வீழச்சிக்கு காரணம் பணம் முதலிடம் பெற்றமையாலேயே என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற மாணவர்களின் கண்காட்சி வைபவத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் பாடசாலை கிரிக்கெட் அணி மற்றும் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது எமக்கு ஒரு கௌரவம் இருந்தது. குறிப்பாக தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போது பெரிய அளவிலான கௌரவம் எமக்கு இருந்தது. நாங்கள் தான் 2 கோடி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துதாக என்ற எண்ணம் எம்மிடம் இருந்தது. 

ஆனால் தற்போது கிரிக்கெட்டுக்கு என்ன நடந்திருக்கின்றது. காசுக்காக விளையாடும் கலாசாரம் கிரிக்கெட்டில் உருவாகியுள்ளது. நாடு என்ற வகையிலும் கிரிக்கெட் விளையாடும் காலம் இல்லாமல் போய்விட்டது. நாம் எப்படி இந்த நிலையில் இதிலிருந்து மீள்வோம். 

உங்களுக்கு தெரியும் கடந்த சில தினங்களாக கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி பல எதிர்மறையான செய்திகள் வந்தவன்னம் உள்ளன. ஏன் இந்த நிலைக்கு கிரிக்கெட் வீழ்ச்சியடைந்தது.  இதற்கெல்லாம் பிரதான காரணம் காசு முன்னிலை பெற்றமையாகும். பணம் முதலிடம் பெற்றதால் எமது கிரிக்கெட் விளையாட்டு அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. 

தற்போது இந்த கலாசாரத்தை மாற்றும் காலம் வந்துவிட்டது. இந்த நிலையை கண்டிப்பாக மாற்றியே ஆகவேண்டும். அப்போதுதான் கிரிக்கெட்டை எம்மால் பாதுகாக்க முடியும் என்றார்.